புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுவதற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
உத்தர பிரதேசத்தில் கட்டிட இடிப்பு நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து மேற்கொள்ளப்படுவதாக ஜமியத் உலாமா -ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தர பிரதேச அரசு , ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம்’’ என தெரிவித்தது.
இதேபோல் மத்திய பிரதேசம்,குஜராத் மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பதில் அளிக்கும்படியும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜமியத் உலாமா -இ-ஹிந்த் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் சி.யு.சிங் ஆகியோர் வாதிடுகையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீடுகளை தேர்ந்தெடுத்து அவற்றை அதிகாரிகள் இடிக்கின்றனர். ஒவ்வொரு மதக்கலவரத்துக்கு பின்பும் இதுபோன்ற கட்டிடஇடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஜனநாயக அமைப்புக்கு எதிரானது’’ என்றனர்.
இதற்கு பதில் அளித்த சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோர் வாதிடுகையில், ‘‘மனுதாரர் குறிப்பிட்டது போல் ஒருகுறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை. எல்லா சமூகத்தினரும், இந்திய சமூகத்தினர்தான். கட்டிட இடிப்புக்கும், கலவரத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆக்கிரமிப்பு அகற் றும் நடவடிக்கை கலவரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. தேவையற்ற பதற்றத்தை உருவாக்க கூடாது’’ என்றனர்.
உத்தர பிரதேச அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.கட்டிட இடிப்புக்கு ஒட்டுமொத்த தடை உத்தரவின் கீழ் கலவரவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க முடியாது. அதனால் கட்டிட இடிப்புக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க கூடாது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மாநிலம் முழுவதும் கட்டிட இடிப்புநடவடிக்கைக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது. அப்படி செய்தால், அது மாநகராட்சி அதிகாரிகளின் உரிமைகளை முடக்கி விடும்’’ என கூறினர்.