அதிமுக கட்சியிலிருந்து ஓபிஎஸ் மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதலை உருவாக்கி வந்தது. இதையடுத்து இந்த விசகாரத்தில் இருதரப்பும் நீதிமன்ற படியேறிய நிலையிலும், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் ஆக அண்மையில் நடந்த செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
எனினும் இருதரப்பு மோதல் கலவரமாக வெடித்ததால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களான வி.என்.பி. வெங்கட்ராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், மகனும் ஆகிய ரவீந்திரநாத், இளைய மகன் ஜெய பிரதீப், ஐந்து மாவட்ட செயலாளர்களான சையது கான், அசோகன், வெல்லமண்டி நடராஜன், ராமச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோரும், கோவை செல்வராஜ், மருத அழகராஜா, புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரும், ஜெயலலிதா தீவிர ஆதரவாளரான அஞ்சு லட்சுமி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தன்னை யாராலும் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்று அறிவித்த நிலையில், தற்போது அவரது தீவிர ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான அஞ்சு லக்ஷ்மி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், பணத்திற்கு பின்னால் நாங்கள் செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM