இந்திய நிகழ்வுகள்
பஞ்சாப் பாடகருக்கு 2 ஆண்டு சிறை
பாட்டியாலா-பிரபல பஞ்சாப் பாடகர்தலேர் மெஹந்திக்கு, ஆள்கடத்தல் வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாங்ரா பாடகர் தலேர் மெஹந்தி. இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர், தன் பாடல் நிகழ்ச்சிகளை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் நடத்தியுள்ளார். இதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்போது, தங்களது நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, பலரையும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக, 2003ல், தலேர் மெஹந்தி மீது 35 புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இது தொடர்பான வழக்கில், கடந்த ௨௦௧௮ல் அவருக்கு பாட்டியாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த தலேர் மெஹந்திக்கு ஜாமின் கிடைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த பாட்டியாலா மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில், தலேர் மெஹந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருடைய இரண்டு ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. போலீசார் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எட்டு பெண்களை மணந்து ஏமாற்றிய இன்ஜினியர்
திருப்பதி-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், எட்டு பெண்களை திருமணம் செய்து மோசடி செய்தவருக்கு போலீசார் ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த எட்டு பெண்கள் ஹைதராபாதில் நேற்று கூறியதாவது:ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. பிரபல ‘சாப்ட்வேர்’ நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகவும் திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். விவாகரத்து பெற்ற, வசதி படைத்த பெண்களை மட்டுமே தொடர்பு கொண்டு பேசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுவரை எட்டு பேர் ஏமாந்துள்ளோம். அதில் சிலர் கர்ப்பமாக இருக்கின்றனர். இது குறித்து தெலுங்கானா மற்றும் ஆந்திர காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க, அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரதமர் மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு
பாட்னா-பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், 2047க்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்த பயங்கரவாதிகள் இருவரை பீஹார் போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி பீஹார் சென்றார். அப்போது பிரதமர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் பீஹார் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீப் என்ற இடத்தில், பிரதமர் மீதான தாக்குதல் குறித்து கடந்த 6, 7ம் தேதிகளில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் கடந்த 11ல், போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீஸ் அதிகாரி
அதில் ஓர் ஆவணத்தில், ‘2047ல் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அதார் பர்வேஸ், முகமது ஜலாலுதீன் என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில், ஜலாலுதீன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. இவருக்கு, ‘சிமி’ மாணவர் அமைப்புடனும் தொடர்பு உள்ளது. இருவருமே, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
ஆயுத பயிற்சி
பாட்னாவின் புல்வாரி ஷரீப் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இவர்கள் ஆயுத பயிற்சி அளிக்கின்றனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில இளைஞர்கள் இங்கு அதிக அளவில் வந்து வசித்து பயிற்சி பெறுவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரித்து வருகிறது. மூன்றாவது பயங்கரவாதியை இவர்கள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.எல்.ஏ.,வின் பாலியல் தொழில்; சி.ஐ.டி., போலீஸ் விசாரிக்க கோரிக்கை
பாரதீப்-‘பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மீதான புகாரை, குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்’ என, ஒடிசா காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பிஜய் சங்கர் தாஸ், கடந்த மாதம், சோமாலிகா தாஷ் என்ற பெண்ணை பதிவுத் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டார். இதைத் தொடர்ந்து சோமாலிகா தாஷ், பிஜய் தாஸ் பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும், பாலியல் விடுதி நடத்துவதாகவும் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, பிஜய் சங்கர் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜகத்சிங்புர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சி.ஐ.டி., எனப்படும் குற்றப் பிரிவு போலீசுக்கு கடிதம் எழுதிஉள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் செல்வாக்கு உள்ள பிஜய் சங்கர் தாஸ் மீதான பாலியல் வழக்கை, நியாயமான முறையில் விசாரிக்க அதை சி.ஐ.டி., போலீசுக்கு மாற்ற வேண்டும் என, சோமாலிகா தாஷ் கோரியுள்ளார். பெண்களை கடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும், சமூக ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.எனவே இந்த வழக்கை சி.ஐ.டி., போலீஸ் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக நிகழ்வுகள்
அரசு பஸ்சில் கலாட்டா; டிரைவர் முரண்டு
உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டையில் பஸ்சில் கலாட்டா செய்த இளைஞர்களால் டிரைவர், பஸ்சை இயக்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நத்தாமூருக்கு தடம் எண். 1 அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 7:30 மணியளவில் திருவெண்ணைநல்லுார் சாலையில் சென்றபோது, பஸ்சில் கூட்டம் நெரிசலும், இளைஞர்கள் பலர் படியில் தொங்கியபடி சென்றனர்.டிரைவர், கண்டக்டர் இருவரும் இளைஞர்களிடம் படியில் தொங்க வேண்டாம் எனவும், பின்னால் காலியாக வரும் பஸ்சில் வரும்படி கூறினர். ஆனால் இளைஞர்கள் பஸ்சில் கூச்சலிட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் டிரைவர் பஸ்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி பஸ்சை இயக்க மறுத்தார்.தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களையும், டிரைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இரவு 7.50 மணியளவில் பஸ் புறப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அருகே முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த அரும்பராம்பட்டைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் சுப்ரமணியன், 65; அதே பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இருவரும் கடந்த 13ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது, சின்னதம்பி, சுப்ரமணியனிடம் உங்கள் வீட்டில் கருவாடு வைத்திருந்தால் யாருக்கும் தெரியாமல் எனக்கு கொடு என்று கேட்டுள்ளார்.சுப்ரமணியன் அன்று இரவு 11:00 மணிக்கு சின்னதம்பி வீட்டிற்குச் சென்று அவர் மனைவி சாரதாவிடம் கருவாடு கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது சின்னதம்பியின் மகன் அஜித், 21; இந்த நேரத்தில் எதற்கு எங்கள் வீட்டிற்கு வந்தாய் என கேட்டு, தாக்கியுள்ளார்.இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார், அஜித் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
பொள்ளாச்சி;கூலித்தொழிலாளியை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே வீட்டில், 5 வயது சிறுமி தனியாக விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு அருகில் வசிக்கும் கூலித்தொழிலாளி நாகராஜ், 47, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜை, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
30 பவுன் நகை கொள்ளை
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் 40. கத்தார் நாட்டில் பணிபுரிகிறார்.
விடுமுறைக்கு வந்தவர் குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது பின்புற பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணகுடி போலீசார் விசாரித்தனர்.
கள்ளக் காதலனை கொன்றது ஏன்: பெண் வாக்குமூலம்
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கள்ளக்காதலனை கொலை செய்தது ஏன் என்பது பற்றி எம்.பில். பட்டதாரி பெண் ஷீபா 37 வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றி வந்த உதவியாளர் ரதீஷ்குமார் 35 நேற்று முன்தினம் கள்ளக்காதலி ஷீபாவால் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஷீபா அளித்துள்ள வாக்குமூலம்: நான் எம்.எஸ்.சி. எம்.பில். பட்டதாரி. தனியார் பாலிடெக்னிக்கில் பத்து ஆண்டுகள் பேராசிரியையாக பணியாற்றியுள்ளேன்.
கணவர் மேக்சன். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகள் உதவி திட்டத்தில் பயன் பெற முயற்சித்த போது ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு உதவினார். தொடர்ந்து நாங்கள் பழகி வந்த நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்ற பணத்தை இ.எஸ்.ஐ. மூலம் திரும்ப பெற உதவினார். இதனால் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது.
அவரது பேச்சில் கணவர் குழந்தைகளை மறந்தேன்.’என் மனைவியை ரதீஷ்குமார் டார்ச்சர் செய்கிறார்’ என்று வடசேரி போலீசில் என் கணவர் மேக்சன் புகார் செய்தார்.ஆனால் ‘அப்படி ஒன்றும் இல்லை’ என்று கூறி ரதீஷ்குமாரை காப்பாற்றினேன். கணவரை விவாகரத்து செய்தால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரதீஷ்குமார் கூறியதால் 2019ல் விவாகரத்து பெற்றேன். அதன் பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
அடிக்கடி அவரது அலுவலகத்துக்கு சாப்பாடு எடுத்து செல்வேன். அங்கு சாப்பிட்டு விட்டு ஜாலியாக இருப்போம்.கடந்த ஆண்டு கார்த்திகாவை ரதீஷ்குமார் திருமணம் செய்ததை என்னிடம் மறைத்தார். அதன் பின் எனது தொடர்பை துண்டிக்க தொடங்கினார் இது மிகவும் கவலை ஏற்படுத்தியது.எனது பிறந்த நாளுக்காக போன் செய்த போது நீ இன்னும் சாகவில்லையா என்ற கேட்டார்.
நாளை எனது பிறந்த நாள் உன்னை பார்த்து விட்டு செத்து விடுகிறேன் என்று கூறினேன். அதனை ஏற்று வரசொன்னார். நான் மயக்கமருந்து கலந்து கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிட்டதும் மயங்கினார். பின்னர் தயாராக கொண்டு வந்திருந்த கத்தி குத்துாசியால் 30 இடங்களில் குத்தினேன்.அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் 100க்கு போன் செய்து தகவல் சொன்னேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்