சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி சட்டப்பேரவைச் செயலகத்தில், துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதிகளின் எம்.பி.க்கள், தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் வாக்களிக்க உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெறுகிறது. எம்.பி., எம்எல்ஏ.க்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல், டெல்லி நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநிலசட்டப்பேரவை வளாகங்களில் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பெட்டிகள், மாநிலங்களுக்கு நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டன.
சென்னைக்கு நேற்று வந்த வாக்குப்பெட்டி, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைச் செயலர் அலுவலக வளாகத்தில், ஓர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீலிடப்பட்டது. மேலும், அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 18-ம் தேதி தேர்தல் ஆணையப் பார்வையாளர் முன்னிலையில், தலைமை தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவைச் செயலர் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டு, வாக்குப்பெட்டி வெளியில் எடுக்கப்படும். தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெறும் குழு கூட்ட அரங்கில் அந்தப் பெட்டி வைக்கப்படும்.
அன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சீட்டு அடிப்படையிலான இந்த தேர்தலில், எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏ.க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்படும். வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ‘ஊதா’ வண்ண மை அடங்கிய பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விருப்ப வாக்கு
குடியரசுத் தலைவர் தேர்தலில், விருப்ப அடிப்படையில் வாக்களிக்கும் முறை உள்ளது. அதன்படி, ஒரு வாக்காளர் விருப்ப அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவோரில் ஒருவருக்கோ அல்லது கூடுதலாக மற்றொருவருக்குமோ வாக்களிக்கலாம்.
இந்த தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா ஆகிய இருவர் மட்டுமே களத்தில் உள்ளனர். இருவரும் சமமான வாக்குகள் அல்லது வாக்கு மதிப்புகள் பெறும்பட்சத்தில், இருவருக்கும் வாக்களித்தவர்களின் வாக்குச்சீட்டில், 2-வது வேட்பாளர் பெற்ற வாக்குகள் கணக்கிடப்படும்.
இந்த தேர்தலில் எம்.பி.க்களின் வாக்குக்கு 700-ம், எம்எல்ஏ வாக்குக்கு 176-ம் மதிப்புநிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்,2-வது வாக்குக்கு, அந்த வாக்குகளை அளித்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிப்பு நிர்ணயிக்கப்படும்.
மேலும், வாக்காளர் வேறு இடத்தில் வாக்களிக்க விரும்பினால், உரிய காரணத்துடன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வகையில், நாகைஎம்.பி. செல்வராஜ், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர், தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் வாக்களிக்க அனுமதி கோரியுள்ளனர்.
இதுதவிர, வாக்களிக்கும் இடம் தொடர்பாக விண்ணப்பிக்க, தேர்தல் ஆணையம் மேலும் காலஅவகாசம் வழங்கியுள்ளது. எனவே, யார், யார் சென்னையில் வாக்களிக்க உள்ளனர் என்பது குறித்த இறுதித் தகவல், விரைவில் வெளியாகும் என்று சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.