புதுடில்லி :கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேசியக் கட்சிகளுக்கான நன்கொடை, 41.49 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசியவாத மக்கள் கட்சி ஆகிய எட்டுக் கட்சிகள், தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம், 2020 – 2021ல் இந்த தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.
இச்சங்ம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2020 மார்ச் மாதத்தில் நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் முதல் அலை துவங்கியது. இதனால், 2020 – 2021ம் நிதியாண்டில், தேசியக் கட்சிகளுக்கான நன்கொடை, முந்தைய ஆண்டைவிட 41.49 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தமாக, 420 கோடி ரூபாய் நன்கொடை குறைந்துள்ளது.
பா.ஜ.,வுக்கு, 2019 – 2020ல் 785.77 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது. அது, 2020 – 2021ல் 477.54 கோடி ரூபாயாக குறைந்தது. அதாவது, 39.32 சதவீதம் குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு, 139.01 கோடி ரூபாயில் இருந்து, 74.52 கோடி ரூபாயாக நன்கொடை குறைந்துள்ளது. அதாவது, 46.39 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த, 2020 – 2021ம் நிதியாண்டில் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடையில், 80 சதவீதம், அதாவது, 480 கோடி ரூபாய் தொழில் நிறுவனங்கள் வாயிலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement