தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், அதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
அன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சற்று உடல்சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தன்னை தனிமை படுத்திக்கொண்டதாகவும், மக்கள் அனைவரும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு வலியுறுத்தி பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது உடல் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றவர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.