புதுடெல்லி: சமாதி நிலையில் இருப்பதாக அறிவித்திருந்த நித்யானந்தா திடீரென தோன்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா, பெங்களூரில் இருந்து தப்பிச் சென்று, இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு உரை ஆற்றி வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நேரில் தோன்றவில்லை. இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியானது. அவை புரளி எனவும், நான் ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பதாகவும் நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதன்பிறகு சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்ட அவர் குருபூர்ணிமா நாளான ஜூலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அறிவித்தார். அதன்படி நேற்று இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், சிறிது நேர இடைவேளைக்கு பிறகு தமிழிலும் அருளுரை ஆற்றினார். அப்போது நித்தியானந்தா பேசியதாவது: இந்த நன்நாளில் என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து 42-வது நிகழ்வை தொடங்குகிறேன். இன்றிலிருந்து 42-வது சாதுர்மாசியத்தை தொடங்குகிறேன். 3 மாத கால நீண்ட நெடிய சமாதிக்கு பின் உங்களுடன் பகிர்ந்து கொள்ள பரமசிவனின் ஞானமும், ஆசியும், அருளும் நிறைய இருக்கிறது. இன்று முதல் சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். இன்று முதல் நாள் நான் சொல்ல விரும்புவது மிகப் பெரிய நன்றி. பல விதத்தில் கைலாசாவுக்கு துணையாகவும், ஆதரவாகவும், பலமாகவும் நின்ற எல்லா பக்தர்கள், அன்பர்கள், சீடர்கள், இந்துக்கள் அனைவருக்கும் நன்றி. பல பேர் உங்களின் காலம், பணம், உங்களுடைய அன்பு, ஆதரவு, பல நிலைகளில் கைலாயத்திற்கு துணை புரிந்தீர்கள், புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. பல பேர் உடல் நலத்தை விசாரித்து உங்கள் அன்பையும், பரிவையும் வெளிப்படுத்தினீர்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி. சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால் எதை முன்பு சொல்வது, எதை அடுத்து சொல்வது எனும் இந்த போராட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் அமைதியோடு இருக்கிறேன். சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை. அழிகிற பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று உடல், மனம், உணர்ச்சி. இதெல்லாம் அழிவது. ஆனால் இதை எல்லாம் தாண்டி அழிவில்லாத ஒன்று நம்மில் இருக்கிறது. அதுதான் ஆன்மா. எனக்கு 3 வயதாக இருக்கும்போது என் குருமார்கள் மடியில் அமர வைத்து சதுர்மாசியத்தை தொடங்கி வைத்தார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்து சமயம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் செய்திருக்கிறேன். அழியாத ஒன்றின் மீது ஈடுபாடு வரும், அதன் மீது ஈர்ப்பு வரும். அது வந்து விட்டாலே பரமசிவன் உங்களுக்குள் நிறைந்து விடுவார். அவருக்குள் நீங்கள் கரைந்து விடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. அதில் பல நிலைகள் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராக சமாதி நிலையை அனுபவமாக பார்த்தவர்கள் இருந்தார்கள். நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள். உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம். ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூலை 13-ந் தேதி வரை நிறைய நடந்துள்ளது. அது உங்களுக்கு 3 மாதம். எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். பரமசிவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர் 10 ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது பழைய பழமொழி. ஆனால் புதிய உண்மை என்னவென்றால், அவர் உங்களை நோக்கி பில்லியன் கணக்கான படிகளை எடுக்கிறார். அப்போது தான் நீங்கள் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பீர்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார். நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும். இவ்வாறு அவர் பேசினார்.