சரத்குமார் ஆரம்பிக்கும் புது கழகம்! #Classics

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று பலராலும் நினைக்கப்பட்ட சரத்குமார், முதன் முறையாக நவம்பர் மாதம் ஜூனியர் விகடனில் தமிழக முதல்வரைத் தாக்கி கொடுத்த பரபரப்புப் பேட்டிக்குப் பிறகு முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார்.

ரத்குமார் பல ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதுமாக பிஸியாக இருக்கிறார். ரஜினிகாந்தின் ‘முத்து’ எவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீஸானதோ, அதே அளவு எதிர்பார்ப்பு சரத்குமாரின் லேட்டஸ்ட் படமான ‘மகாபிரபு’வுக்கும் இருந்தது. இந்தப் படத்தில் விஜயன், சண்முகசுந்தரம் போன்ற வக்கீல்கள் தாக்கப்பட்ட விஷயங்கள், அராஜகம், போலீஸின் இயலாமை ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இறுதி காட்சியில் இன்றைய நிலவரத்தை எடுத்து கூறும் விதமாக ‘அரெஸ்ட் செய்தால் ஆஸ்பத்திரியில் நெஞ்சு வலி என்று படுத்துக் கொள்வேன்’ என்ற ஒரு வசனம்கூட வருகிறது.ரஜினிகாந்துடன் இணைந்து அரசியல் பிரவேசம் செய்யலாம் என்று முடிவெடுத்த சரத்குமார், இப்போது ‘விழிப்பு உணர்ச்சிக் கழகம்’ என்ற இயக்கத்தைத் துவக்க இருக்கிறார். இது அரசியல் கட்சியாக மாறக்கூடும் என்று ஜூ.வி-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகிறார் சரத் பேட்டியிலிருந்து…

Sartath Kumar Start New Party – 1996

“நவம்பர் மாதம் நீங்கள் முதன்முதலாக ஜூனியர் விகடனில் ஜெயலலிதாவை எதிர்த்துக் கொடுத்த பேட்டிக்குப் பிறகு இன்றுவரை உள்ள காலகட்டத்தில் சாதித்தது என்ன?”

“சரத்குமார் இந்த ஆட்சியை எதிர்க்கிறாரா என்று முதலில் சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், மக்கள் சொல்ல நினைத்த சொல்ல பயந்த விஷயத்தைத் தைரியமாக சரத்குமார் பேசுகிறாரே என்ற எண்ணம்தான் இன்று மேலோங்கி இருக்கிறது. ஜூனியர் விகடனில் என் பேட்டி வருவதற்கு முன்பு ஏகப்பட்ட வதந்திகள் இருந்தன என் உண்மையான சுயரூபம் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. எல்லோருமே பேசப் பயந்த ஒரு விஷயத்தை சரத்குமார் எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கியது ஒரு தனிப்பட்டவரின் மீதுள்ள காழ்ப்பு உணர்ச்சியால் அல்ல என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.”

“ஒரு நடிகர் என்கிற முறையில்தான் நீங்கள் போகுமிட மெல்லாம் கூட்டம் வருவதாகக் கூறுகிறார்களே..?”

“இப்போது எங்கு சென்றாலும் மக்கள் என்னை நடிகனாக பார்க்காமல் ‘எங்கள் ஊரில் ரோடு சரியில்லை. பள்ளியில் கூரை இல்லை, குடிதண்ணீர் இல்லை’ என்ற ஊர் பிரச்னையைக் கொண்டு வருகிறார்கள். இவன் ஏதாவது செய்யமாட்டானா என்ற தாபம் இருக்கிறது. நான் படப்பிடிப்புக்குச் செல்லும் கிராமங்களில் வயதான பெண்கள்கூட வந்து ராசா, நீயும் ரஜினியும் வந்து இந்த ஆட்சியை அகற்ற உதவி செய்யனும் என்று கூறுகிறார்கள் மக்களிடம் அதிக விழிப்பு உணர்ச்சி இருக்கிறதைப் பார்க்கிறேன்.

நான் போகும் இட மெல்லாம் மக்கள் திரண்டு வருகிறார்கள் – லாரி வைத்து நாங்கள் கூட்டி வரவில்லை. கோபிச்செட்டிப்பாளையம் அ.தி.மு.க-வின் கோட்டை என்பார்கள். அங்கேயே எனக்குப் பிரமாண்டமான வரவேற்பு இருந்தது. அதேபோல்தான் ஈரோடு, கடலூர், ஊட்டி இங்கெல்லாம் என்னமோ தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருப்பதைப் போல் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.”

Sartath Kumar Start New Party – 1996

“பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் அரசியலில் குதித்ததாகக் கூறப்படுகிறதே?”

“நான் தொழில் முறையில் கலைஞனாக இருந்தாலும், எங்கள் குடும்பமே அரசியல் குடும்பம் என் பெரியப்பா சி.பா. ஆதித்தனார். மாமா கே.பி கந்தசாமி மற்றும் கே.டி.கே தங்கமணி, என் சகோதரன் எஸ். சுதர்சன் என்று என் குடும்பத்தினர் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஒரு அரசாங்க அலுவலக ஊழியரைவிட நடிகன் அதிகமாக மக்களைச் சந்திக்கிறான். நேரடியாகப் பழகுகிறான். நடிகர்களுக்கு நாட்டுப்பற்று நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கக்கூடாதா? தமிழகத்தில் எம்.ஜி.ஆர் செய்த நல்ல விஷயங்களை யாராவது மறுக்க முடியுமா?

“நீங்கள் ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்தும், அதிமுக தலைவர்கள் உங்களைத் திரும்பத் தாக்கிப் பேசாதது ஏன்?”

“ஏன் பேசவில்லை ‘நாட்டாமை’ நாடாள முடியுமா? ‘நாடோடி மன்னன்’ மறுபடியும் நாடோடியாக ஆகிவிடுவான் என்று சேடப்பட்டியார்முதல் பல அமைச்சர்கள் திட்டினார்களே. இவற்றைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஆனால், இந்த அரசு என் செயல்களைக் கண்டு பயப்படுகிறது உதாரணமாக நான் கோபிசெட்டிப்பாளையத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது சேலத்தில் முந்நூறு குடிசைகள் எரிந்து போய்விட்டதாகவும் அரசாங்கம் கண்துடைப்புக்காக ஏதோ கொஞ்சம் அரிசி கொஞ்சம் பணம் கொடுத்ததாகக் கூறினார்கள். உடனே நான் புதிதாகக் குடிசைகளைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன் (இதற்கு இரண்டு லட்ச ரூபாய் செலவானது) என் ரசிகர் மன்றத்தினர் கடமை உணர்வோடு இந்த நல்ல காரியத்தைச் செய்தார்கள் இதைக் கேள்விப்பட்ட தமிழக அரசு அந்த மாவட்ட கலெக்டரையும் தொகுதி எம்.எல்.ஏவையும் பாடாய்ப் படுத்திவிட்டது ‘எப்படி சரத்குமார் வந்து அங்கு குடிசைகளைப் போடவிட்டீர்கள்’ என்று அவர்கள் மீதே பாய்ந்தது. இது அரசின் பலவீனத்தையல்லவா காட்டுகிறது”

“ஒரு ஸ்டண்ட் அடிப்பதற்காகத் தான் நீங்கள் அரசியவில் ஈடுபட விரும்புகிறீர்களா?”

“தேவையே இல்லை. ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட் பணத்தில்தான் எங்கள் தொழிலே நடக்கிறது. மக்கள் ஆதரவில்லாமல் ஒரு கலைஞன் இல்லை. சினிமாவில் வேண்டுமானால் ‘ஸ்டண்ட்’ இருக்கலாம். அரசியலில் தேவையில்லை. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அப்படி நினைக்கும் அரசியல்வாதிகள்தான் முட்டாள்கள், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள்.”

Sartath Kumar Start New Party – 1996

“ஜெயலலிதாவை எதிர்க்கத் தொடங்கிய பிறகு இந்த அரசு உங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கிறதா?”

“நிறைய. என்னுடைய லேட்டஸ்ட் படமான ‘மகா பிரபு’-வை வாங்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கும் மறைமுக அச்சுறுத்தல்கள்! ‘மகா பிரபு’ ரிலீஸாகுமா என்ற நிலைகூட இருந்தது. தமிழகம் முழுவதும் ‘மகாபிரபு’ பட போஸ்டர்கள் ஆளுங்கட்சியினரால் கிழிக்கப்படுகின்றன. சேலம், தர்மபுரி மாவட்ட வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டதால், அந்த மாவட்ட கலெக்டர் விழாவுக்குப் போகக்கூடாது என்ற உத்தரவு. இப்படி எதிர்ப்புகள். என்னை மிகவும் பாதித்த விஷயம் – சரத்குமார் என்று பெயர் எழுதிப் போகும் ஆட்டோக்கள் போலீஸாரால் மடக்கப்படுகின்றன. எல்லா ‘ரெக்கார்டுகளும்’ சரியாக இருந்தும், அவர்களின் மீது பொய் கேஸ் போடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘சரத்குமார் பெயரைப் போட்டால் இதுதான் கதி’ என்று மிரட்டுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது என் மனதை மிகவும் புன்படுத்துகிறது. இவற்றையெல்லாம் மீறித்தான் அரசியல் நடத்த வேண்டுமென்றால் நான் ரெடி சார்! என் ரசிகர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் தினமும் வருகின்றன அவர்களைப் பொறுமையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”

“நீங்கள் ஏதோ தணிக்கட்சி தொடங்கப்போவதாகக் கேள்விப்படுகிறோமே?”

“கட்சி அல்ல. ஒரு இயக்கம். ‘விழிப்பு உணர்ச்சிக் கழகம்’ என்ற ஒன்றைத் துவக்க இருக்கிறேன். மக்களை நல்வழிப்படுத்த, அவர்களின் சக்தியை வெளிக்கொணர இந்த இயக்கம் பாடுபடும். முதலில் இது கட்சி சார்பற்றதாக இருக்கும். தேவைப்பட்டால் இந்த இயக்கத்தை அரசியல் கட்சியாகக்கூட மாற்ற எண்ணம் உண்டு. சென்னை கொரட்டூரில் சுமார் ஆயிரம் பெண்கள் குடிநீரில் சாக்கடை தண்ணீர் கலக்கிறது என்று மறியல் செய்தார்கள். இதுதான் விழிப்பு உணர்ச்சி. இதைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம் தெருவில் சரியாக ரோடு போடவில்லையா, மந்திரி வீட்டு வாசலில் மறியல் செய்யுங்கள், அரசியல்வாதிகளைச் சும்மா விடாதீர்கள். குட்டக் குட்ட குனிவதால்தான் நாம் இந்த நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம்.மக்கள் புரட்சி உண்மையாகவே வெடிக்கவேண்டும். ரோடு சரியில்லை, ரேஷன் அரிசி மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை, ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கிறார்கள் என்று எல்லோருமே பேசிக் கொண்டிருந்தால் யார்தான் பூனைக்கு மணி கட்டுவது? யாராவது தூண்டி விட்டா இந்தப் பெண்கள் கொரட்டூரில் சாலை மறியல் செய்தார்கள்? மந்திரிகள் போகும் ரோட்டில் மட்டும் ஓரமாக வெள்ளை கலர் பொடியைத் தூவி இனி ஏமாற்ற முடியாது. செய் அல்லது செத்து மடி, வோட்டு வாங்கி துட்டு செய்ய நினைப்பவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அமைச்சர்கள் ஏ.ஸி. ரூமை விட்டு தெருவுக்கு வந்து மக்கள் பிரச்னைகளைப் பார்க்க, நிவர்த்தி செய்ய மக்கள் சக்தியால்தான் முடியும். மன்னர் ஆட்சியையே விரட்டிய நாம், இந்த ராணியின் ஆட்சியை விரட்ட முடியாதா என்ன?”

“அப்படியானால் நீங்கள் முழுநேர அரசியல்வாதியாக ஆகப்போகிறீர்களா?”

“இல்லை. இன்னும் ஆறு, ஏழு வருடங்களுக்கு நடிப்பேன். நடிப்புத் தொழிலை விடமாட்டேன். சினிமா என் தொழில். இன்னும் சினிமாவில் எவ்வளவோ செய்ய வேண்டியது இருக்கிறது. இப்போது தினமும் இருபது மணி நேரம் வேலை செய்கிறேன். அதில் எட்டு மணி நேரம் அரசியலுக்கு ஒதுக்கப்போகிறேன். சினிமாவுக்கு ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து மணி நேரம் போதுமானது. அரசியல் என் சினிமா வாழ்க்கையைப் பாதிக்காது.”

“அப்படியானால் நீங்கள் வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

“கண்டிப்பாகப் பாராளுமன்றத்துக்கு போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்று முடிவு செய்யவில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் அல்லது காங்கிரஸ் – எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டணியை ஆதரிக்கும் வேட்பாளனாகப் போட்டியிடுவேன். நாகர்கோவில், கோபிசெட்டிப்பாளையம், தென் சென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளிலிருந்து வேண்டுகோள் வந்திருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு எதிரான பொது வேட்பாளராகப் போட்டியிடுவதுடன், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வேன். ஜெயலலிதாவைப் பதவியிலிருந்து இறக்க எந்தத் தியாகமும் செய்ய தயாராக இருப்பேன். தெருவில் ஒரு வீடு தீப்பற்றினால் ’அனைவரும் யோசிக்காமல் ஆளுக்கு ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வருவதைப் போன்றதுதான். தமிழகம் இப்போது தீப்பிடித்து எரிகிறது. ஆகவே அனைவரும் ஒன்றாகச் செயல்படவேண்டும்”

Sartath Kumar Start New Party – 1996

“நீங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரி சேஷனைச் சந்தித்து பேசியதன் முக்கியத்துவம் என்ன?”

“இதில் என்ன அரசியல் இருக்கிறது? மூப்பனார், குமரியார், எஸ்.ஆர்.பி. போன்ற தலைவர்களைச் சந்திப்பது போல் அரசியல் சார் பில்லாத முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்தித்து வருகிறேன். அந்த வகையில்தான் சேஷனைச் சந்தித்தேன். அவர் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார். நாங்கள் அரசியல் பேசவில்லை. பொதுவாகத் தமிழக நிலைமைகனைப் பற்றிப் பேசினோம்.”

“ரஜினி ரசிகர்கள் உங்களைப் பெருமளவில் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறதே?”

“நான் போகும் இடமெல்லாம் என் ரசிகர் மன்றத்தினரும், ரஜினி ரசிகர் மன்றத்தினரும் இணைந்து பல நல்ல காரியங்களைச் செய்வதைப் பார்க்கிறேன். நான் பேசும் கூட்டங்களுக்கு அவர்கள் வந்து என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். ஒரு நல்ல காரியம் நடக்க நல்லவர்கள் துணை நிற்கிறார்கள்.”

“ரஜினியைக் கடைசியாக எப்போது சந்தித்துப் பேசினீர்கள்?”

“பதினைந்து நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். மனம்விட்டுப் பேசினேன். என் ‘மகாபிரபு’ படத்தைப் பார்த்தார். அரசியலில் கூடிய விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படலாம். எல்லாம் டெல்லியின் கையில்தான் இருக்கிறது.”

“பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களாமே?”

“ஆமாம். வெகு விரைவில் பிரதமரைச் சந்திப்பேன், அ.தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி சேராது என்பதுதான் என் உறுதியான நம்பிக்கை காங்கிரஸ்காரர்கள் தவறு செய்தாலும் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட பிரதமர் எங்கே, கொலையாளிகளைத் தப்பவிடும் ஜெயலலிதா எங்கே?”

– பிரகாஷ், எம். ஸ்வாமி

(18.02.1996 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் இருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.