வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாலே: இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபய, அங்கிருந்து சவுதிக்கு சொந்தமான விமானம் மூலம் சிங்கப்பூர் கிளம்பி சென்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 9 ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. ஆனால், அதற்கு முன்னரே, அதிபர் கோத்தபய, அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். பின்னர் விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலத்தீவு சென்றார். அவருடன், மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் உடன் சென்றனர்.
அங்கும், கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதனால், அவர் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். ஆனால், பாதுகாப்பு காரணமாக உடனடியாக கிளம்பவில்லை.
இந்நிலையில், சவுதிக்கு சொந்தமான விமானத்தில் அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூர் சென்றார். அங்கு சென்ற உடன், சவுதிக்கு செல்ல கோத்தபய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்புவில் ஊரடங்கு
இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதற்கு முன்னர், பார்லிமென்டை கைப்பற்ற முயற்சி செய்யும் போராட்டக்காரர்களிடம் இருந்து, அதனை பாதுகாக்கும்படி, முப்படையினருக்கு ரணில் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்புவில், ராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement