உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டிய நாளான 1987 ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள்தொகை தினமாக கடைபிடித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஜூலை 11-ம் தேதி அனுசரிக்கப்பட்ட 36-வது உலக மக்கள் தினத்தன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையும், அதைத்தொடர்ந்து இந்திய அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐ.நா. அறிக்கை:
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையால் வெளியிடப்பட்ட `உலக மக்கள்தொகைப் பெருக்கம்-2022′ அறிக்கையில் வரும் 2022 நவம்பர் 15-ம் தேதியன்று உலக மக்கள் தொகையானது 800 கோடியைத்தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகையானது 2030-ல் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும், 2080-ல் 1000 கோடியாகவும் உயரும் எனவும் 2100-ம் ஆண்டுவரை அந்த அளவே தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இன்னும் ஓராண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை மிஞ்சும் என்ற தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதாவது, தற்போது இந்தியாவின் மக்கள்தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. அடுத்த ஆண்டு சீனாவின் மக்கள்தொகையை தாண்டி இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிக்கும் என தெரிவித்திருக்கிறது. மேலும், 2050-ல் இந்திய மக்கள்தொகையானது 166 கோடியே 80 லட்சமாக உயரும் என்றும் கணித்திருக்கிறது.
விவாதத்தை ஏற்படுத்திய பா.ஜ.க தலைவர்களின் பேச்சு:
இந்த நிலையில், உலக மக்கள்தொகை தினத்தன்று லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுப்பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “மக்கள் தொகை கட்டுபாட்டுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு நிலை உருவாக நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது” என்று பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும், “வெவ்வேறு மதக்குழுக்களின் வளர்ச்சி விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் ஏற்படுத்தும். பூர்வீகவாசிகள் பற்றிய விழிப்புணர்வோடு மக்கள்தொகை கட்டுப்பாட்டில் நாம் செயல்படும்போது தனிப்பட்ட ஒரு வகுப்பினரின் வளர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பதை அனுமதிக்க கூடாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகையை சமப்படுத்தும் முயற்சியில் அனைத்து மதங்களும் துறைகளும் சமமாக சேர்க்கப்படவேண்டும்” என பேசியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவிடம் இந்தியா தோற்று விட்டது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சியில் சீனாவை இந்தியா முந்தி விட்டது. இனியும் ஒருவரே 10 குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தினார்.
ஏற்கெனவே கடந்த மாதம் மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “விரைவில் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்திருந்தார்.
எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்கள்:
பா.ஜ.க தலைவர்களின் கருத்துக்கு பதிலடிகொடுக்கும் விதமாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் “மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் பா.ஜ.க தலைவர்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். சீனா மக்கள்தொகை அதிகமுள்ள நாடாக இருந்தாலும், பொருளாதாரம், ஜிடிபி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சீனா முன்னணியில்தானே இருக்கிறது? அதிகரித்துவரும் மக்கள்தொகை அச்சுறுத்தலாக இருந்தால், சீனா எப்படி நன்றாகச் செயல்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “இதற்கு மேலாவது பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை போன்ற பிரச்னைகளை மத்திய அரசு தீவிரமாக கவனிக்க வேண்டும். இல்லையெனில், பணவீக்கம், கல்வியறிவின்மை, வேலையின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். அக்னிபத் போன்ற திட்டத்தின் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறித்த பயம், இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கோபம் எப்படி அரசுக்கு எதிரான வன்முறையாக மாறியது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். இனிமேலாவது மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் தேஜஸ்வி தெரிவித்தார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைசி, “முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் இல்லையா? யதார்த்தத்தைப் பார்த்தால், பழங்குடியினரும் திராவிட மக்களும் மட்டுமே பூர்வீகக் குடிகள். உண்மையில் இஸ்லாமியர்கள்தான் அதிகளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகின்றனர். 2016-ல் 2.6 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது 2.3 ஆக உள்ளது. உத்தரபிரதேசத்தில், எந்த சட்டமும் இல்லாமல், விரும்பிய கருவுறுதல் விகிதத்தை 2026-2030-க்குள் அடையலாம். எனவே, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு நாட்டில் எந்தச் சட்டமும் தேவையில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “மக்கள்தொகை பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரச்னையல்ல. அது மொத்த நாட்டையுமே பாதிக்கும் பிரச்னை. இதனை சாதி, மதத்துடன் தொடர்புபடுத்துவது சரியானதல்ல!” என்று தெரிவித்திருக்கிறார்.
முற்றும் விவாதம்:
“இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தினால்தான் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது; வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவகிறது; எனவே மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்” என ஒரு தரப்பினர் பேசிவருகின்றனர்.
அதேசமயம், “மக்கள்தொகை அதிகரித்து வந்தாலும் பிறப்பு விகிதம் என்பது குறைந்திருக்கிறது. இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் மூன்று அல்லது இரண்டுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுவருகின்றனர். குழந்தை பெற்றுக்கொள்வது என்பது மக்களின் தனிப்பட்ட உரிமை; மனித உரிமையில் அரசு ஒருபோதும் தலையிட அனுமதிக்கக் கூடாது; மேலும், இந்தியாவின் பலமே இங்குள்ள இளைஞர்களின் எண்ணிக்கைதான். இந்தியாவின் வளர்ச்சிக்கு, அவர்களின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளவும், அவர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பை உருவாக்கித்தரவும் அரசு தவறிவிட்டது” என மற்றொரு தரப்பினரும் எதிர்வாதிட்டு வருகின்றனர்.