சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சட்டப்பேரவை கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் 17-ம் தேதி நடைபெறுகிறது.
குடியரசுத்தலைவர் தேர்தல் வரும்18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை அதிமுக ஆதரிக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பிளவு கண்டுள்ள நிலையில்,அதிமுகவில் 62 எம்எல்ஏக்கள் பழனிசாமி தரப்பிலும், 3 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் தரப்பிலும் உள்ளனர்.
இந்நிலையில், வரும் 17-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிசாமியின் இல்லத்தில் கூட்டம் நடத்தப்படலாம் என தெரிகிறது. இக்கூட்டத்தில், குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு தொடர்பாகவும், வாக்களிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட உள்ளது.