ஜூலை 9 சம்பவம்: பொதுச் சொத்துக்கள் , தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தொள்பொருள் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை

பொதுச் சொத்துக்கள், நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் என்பன சேதப்படுத்தப்படுவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்…

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளாலும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதமடைந்துள்ளதுடன், அந்த இடங்களில் உள்ள பழமையான மற்றும் கலாசாரப் பொருட்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க வேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற வகையில் நான் விசேட கவனம் செலுத்தி உள்ளேன்.

அதன்படி, முடியுமான அளவு முதலாவது சந்தர்ப்பத்தில், அந்த இடங்களில் உள்ள பெருமதியுள்ள பொருட்களை பாதுகாக்க எமது அதிகாரிகள் பாரியளவு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஜூலை 12 ஆம் திகதி நான் புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (பாரம்பரிய பிரிவு) மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், சேதம் அடைந்துள்ளதாக கூறப்படும், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டேன்.

அந்த இடங்களில் அமைந்துள்ள புராதன நினைவுச் சின்னங்களுக்கு மேலும் சேதம் விளைவிப்பதைத் தடுக்கவும், பெருமதி வாய்ந்த புராதன மற்றும் கலாச்சாரச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரிவினருடனும் கலந்துரையாடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  அந்த இடங்களை எமது திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்ந்தும் சோதனை செய்வார்கள்.

பொதுச் சொத்துக்கள் மற்றும் நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் புராதனச் சின்னங்களை சேதப்படுத்துவதையோ அல்லது திருடுவதையோ மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின், தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பொதுமக்களின் பொறுப்பும் கடமையும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

பேராசிரியர் அனுர மனதுங்க,

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.

12.07.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.