சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக ரசாயன உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகம், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைத் துறையுடன் இணைந்து தேசிய அளவிலான மாநில வேளாண் அமைச்சர்களின் மாநாட்டை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடத்துகிறது. மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா, இணை அமைச்சர்கள் ஷோபா கரந்த்லாஜே மற்றும் கைலாஷ் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அனைத்து மாநிலங்களின் வேளாண்மைத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ள இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இம்மாநாட்டில் மின்னணு வேளாண்மை, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், இயற்கை வேளாண்மை, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் தேசிய மின்னணு சந்தை, நவீனயுக உரங்கள், பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம், சர்வதேச சிறுதானிய ஆண்டு, வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுவின் புதிய தொழில்நுட்பம் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்களுக்கு போதிய முன்னுரிமை கொடுத்து கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கூடுதலாக ரசாயன உரங்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.