கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி 4ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு அவருக்கு உடற்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்கச் சென்றிருப்பதாக சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கையும் வெளியானது.
இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே முதல்வருக்கு உடற்சோர்வு ஏற்பட்டதால் 2 நாட்கள் வீட்டிலேயே ஓய்விலிருந்தார். இதனால் சில நிகழ்ச்சிகள் ரத்துச்செய்யப்பட்டன. அதன்பிறகு தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க, ஆய்வு நடத்த சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM