திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் பலாத்கார காட்சிகள், டார்க் வெப் என்ற ஆபாச இணையதளத்தில் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் நேரடியாக ஈடுபட்டதாக, நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில் குமார் உள்பட 7 பேரும், சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டனர். அந்த நடிகையை பலாத்காரம் செய்த கும்பல், அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்தது. போலீஸ் விசாரணையில் இத்தகவல் தெரிந்தது. இதையடுத்து போலீசார் செல்போனை கைப்பற்ற முயன்றனர். ஆனால், இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. மெமரி கார்டு மட்டுமே போலீசுக்கு கிடைத்தது.இதற்கிடையே வழக்கில் தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, போலீசார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இன்றைக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே நடிகையின் பலாத்கார காட்சிகள் திலீப்பிடம் இருப்பதாக கூறப்படுவது உண்மையா என்பதைக் கண்டுபிடிக்க, நீதிமன்றத்தில் உள்ள மெமரி கார்டை மீண் டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று, விசாரணை நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதுபோலவே பாதிக்கப்பட்ட அந்த நடிகையும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கிடையே மெமரி கார்டை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்ப தேவையில்லை என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து போலீஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் இதை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மெமரி கார்டை மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும், அதுதொடர்பான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி மெமரி கார்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே நடிகையின் பலாத்கார காட்சிகள் டார்க் வெப் என்ற ஆபாச இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக போலீசுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். பலாத்கார காட்சிகள் வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொடர்ந்து விசாரணைக்கு மேலும் 3 வாரம் கால அவகாசம் கேட்க போலீசார் தீர்மானித்துள்ளனர். நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் நீதிமன்ற பாதுகாப்பில் இருந்தபோதும், அவை வெளியானதாக கூறப்படுவது இவ்வழக்கில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, நீதிமன்ற ஊழியர்களை இதுகுறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.