நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு நேற்றைய தினம் ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு
நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு
இதனை தொடர்ந்து நேற்றிரவு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமான அறிவிப்பு மூலம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட உத்தரவு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து
நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று வழமைப்போல் இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளும் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.