புதுடெல்லி: மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்க, வரும் 16, 17ம் தேதிகளில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஓம் பிர்லாவும், வெங்கையா நாயுடுவும் கூட்டியுள்ளனர். வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் வரும் 16ம் தேதி மாலை 4 மணிக்கு மக்களவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதேபோல், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. * வெங்கையாவுக்கு இதுவே கடைசிதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிகிறது. அவர் மாநிலங்களவை தலைவராக பங்கேற்கும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்ய வருகின்ற 19ம் தேதி கடைசி நாளாகும்.