நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 16ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். ஜூலை 17ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் காலை அரசு சார்பில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் வழக்கமான கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்ச பிரகலாத் ஜோஷி நடத்துவார் என தெரிகிறது.
மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அவரது தற்போதைய பதவிக்காலத்தின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையடுத்து 25ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.