ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வினை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஜூலை 17ம் தேதி அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில் உத்தரப் பிரதேசம்,கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பீகார், ஹரியானா இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மாணவர்களால் திட்டமிட்டபடி தேர்வில் கலந்து கொள்ள இயலாது என்பதால் நீட் தேர்வினை நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு நடைபெற்றது. அப்போது நீட் தேர்வு தேதி அட்டவணை ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏன் இப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏப்ரல் மாதம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இப்போதுதான் வழங்கப்படுகிறது. மேலும் எதிர்பாராத கனமழை பெய்துவரும் நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்த உள்ளனர். இக்கட்டான சூழலில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எப்படி பயணம் செய்ய முடியும் எனவும் மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
அதற்கு நீதிபதிகள் இப்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதாகவும் அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் காலத்திற்கு ஏற்ப இந்தியாவில் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து கொண்டே தான் இருக்கும் என்பதால் அதனை எல்லாம் காரணம் காட்டி பல லட்சம் மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வை தள்ளி வைக்க முடியாது என கூறினர். மேலும் இவ்வழக்கில் நிவாரணம் கோருவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கு மாணவர்கள் தொடர்ந்து உள்ளதால் அவர்கள் படிக்கக்கூடிய சூழலில் அவர்களுக்கு எவ்வித அபராதமும் தாங்கள் விதிக்கும் முடிவை எடுக்கவில்லை எனவும் இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுமேயானால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்கலாம்: அதிமுக வன்முறை – விரிவான அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM