கடந்த 15 நாட்களாகவே தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து.
இந்நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தது அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.