டெல்லி: பங்குசந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்திருந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் தனது விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்த போது தனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், யாருக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும், யாரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் சாமியார் கட்டளைப்படியே நிறைவேற்றியுள்ளார். சாமியார் உத்தரவின் பெயரில் தான் சித்ரா ராமகிருஷ்ணா, பால்மர் லாரி நிறுவனத்தில் வெறும் 15 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியனை ஜனவரி 18, 2013ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார். ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் விதிகளிலேயே முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு செபி, தேசியபங்குச்சந்தை மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது.இதனை தொடர்ந்து தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்குகள் தொடர்பாக தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்தது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்த நிலையில் 4 நாட்கள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.