புதுடெல்லி: வரும் 16-ம் தேதி பிரதமருடன் நடைபெற உள்ள இரவு விருந்தில் பங்கேற்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை24-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதையடுத்து, வரும் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இரு தரப்பினரும் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதில் முர்மு வெற்றி பெறுவார் என்று பாஜக உறுதியாக உள்ளது.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடு களை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் 16-ம்தேதி மாலை 6.30 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற ஆடிட்டோரியத்தில் பாஜக சார்பில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் நடைபெற உள்ள இந்த விருந்தில் பங்கேற்குமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இதற்கு அடுத்த நாள் 17-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் என்டிஏ சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு, கூட்டணியில் இடம்பெறாத பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முர்மு வெற்றி பெறுவது உறுதி என தகவல்கள் கூறுகின்றன. இவர் வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.