லண்டன்,-பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக நடந்த இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார்.கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார். அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கியுள்ளது. மொத்தம், 11 பேர் போட்டியிட முன்வந்த நிலையில், மூன்று பேர் விலகினர். அதனால், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, எட்டாக குறைந்தது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. இதில், 101 ஓட்டுகளுடன், ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான, அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிரவர்மன், 27 ஓட்டுகள் மட்டுமே பெற்று வெளியேறினார்.
தற்போதைய நிலையில், ரிஷி சுனக் உட்பட, ஐந்து பேர் அடுத்தக் கட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அடுத்த வாரத்தில் நடக்க உள்ள மற்றொரு ஓட்டெடுப்புக்குப் பின், இரண்டு பேர் தேர்வு செய்யப்படுவர். வரும், செப்., 5ம் தேதிக்குள் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement