லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு சொந்தக் கட்சிக்குள்ளயே எழுப்பப்பட்டது. இதற்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.
எனினும், அவரை சுற்றிய சர்ச்சைகள் அடங்கவில்லை. ரிஷி சுனக், சஜித் ஜாவித் போன்ற எம்.பிக்கள் போரிஸ் ஜான்சன் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வம்சாவளிகளான ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், சஜித் ஜாவித் மற்றும் பென் வேலஸ், பென்னி மோர்டான்ட் உள்பட 11 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இறுதியில் 8 பேர் போயிட்டனர்.
இவர்களில், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இதில், கன்சா்வேட்டிவ் கட்சியின் 88 எம்.பி.க்கள் அவருக்கு வாக்களித்தனா்.
இதன்மூலம் ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பிரதமராவதை இந்தியாவும் உற்று நோக்குகிறது.
யார் இவர்? – ரிஷி சுனக்கின் குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் தான் ரிஷி பிறந்தார். ஆகையால், பிறப்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனானார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார். தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்ஷதா மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்தார்.
தொழிலதிபராக இருந்தாலும் ரிஷியின் அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி உள்ளார்.