பீகார் மாநிலத்தில் உள்ள கோப மர்ஹா ஆற்றங்கரையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மயானத்திற்கு விறகு சேகரிக்க வந்த பெண்களால் குழந்தையை மீட்டுள்ளனர்.
மயானத்தில் மண் திடீரென பெயர்ந்து வருவதை கண்டு மிரண்ட பெண்கள், குழியில் யாரோ உயிருடன் இருப்பதாக பெண்கள் கவனித்து உடனடியாக கிராமவாசிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மயானத்தில் கூடிய கிராமவாசிகள் மண்ணை அகற்றினர். அப்போது வாயில் மண் நிரம்பிய நிலையில் குழந்தையொன்று உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
உடனடியாக அந்த குழந்தையை கோபத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். சிறுமி தன் பெயர் லாலி என்றும், அவரது பெற்றோர் பெயர் ராஜு சர்மா மற்றும் ரேகா சர்மா என்றும் கூறினார். சிறுமி தன் கிராமத்தைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார்.
“என் அம்மாவும் பாட்டியும் என்னை கல்லறையில் புதைத்தார்கள். நான் அழுதபோது என் வாயில் மண்ணை நிரப்பி அங்கேயே புதைத்துவிட்டார்கள்” என்று மருத்துவர் மற்றும் போலீசாரிடம் லாலி கூறினார். குழந்தையின் பெற்றோர் மற்றும் கிராமத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மூன்று வயது குழந்தையை அவரது தாயும் பாட்டியும் உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.