பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை 2047ஆம் வருடத்துக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பீகார் மாநிலம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதிசெய்ததாக அத்தர் பர்வேஸ் மற்றும் முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகளும் இதில் தொடர்புள்ளதாக பீகார் போலீஸ் தெரிவித்திருப்பதால், இந்த வழக்கு குறித்து தேசிய பாதுகாப்பு முகமையும் தற்போது விசாரணை செய்துவருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பு ஆகியவற்றின் பரப்புரை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெயரில் விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த 25 பரப்புரை ஆவணங்கள் இதில் அடக்கம் என பீகார் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆவணத்தில் 2047 ஆம் வருடத்திற்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என்றும், அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அச்சிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாட்னா நகரில் உள்ள புல்வாரி ஷரீப் என்கிற இடத்தில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில் போலீசார் நயா தோலா என்கிற இடத்தில் ஜூலை பதினோராம் தேதி சோதனை நடத்திய போது, அத்தர் பர்வேஸ் மற்றும் முஹம்மத் ஜலாலுதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ஜலாவுதீன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாக சொல்லப்படும் இடத்தில் சோதனை நடத்தியபோது அங்கே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆவணங்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் என புல்வாரி ஷரீஃப் பகுதியின் போலீஸ் கண்காணிப்பாளர் மணிஷ் குமார் தெரிவித்துள்ளர். முகமது ஜலாவுதீன் முன்பு தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடர்புகொண்டு இருந்தார் என அவர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் தங்கி இருந்த இடத்தில் மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து போவது வழக்கம் என அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.
-கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM