பீகார் மாநிலம் கதிஹார் பகுதியில் உள்ள டக்லா கிராமத்தில் ஒரு தம்பதியினர் தன் ஒரு 8 வயது மகளுடன் வசித்துவருகின்றனர். கணவர் புலம்பெயர் தொழிலாளி என்பதால் தற்போது டெல்லியில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், தனது 8 வயது மகளுடன் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் கதவைத் திறந்தவுடன், எதிர்பாராத விதமாக 8 வயது சிறுமியை மட்டும் அருகிலிருந்த சணல் காட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளார். செய்வதறியாது திகைத்த அந்த பெண் கத்திக்கொண்டே அவர் பின்னால் சென்றுள்ளார். உடனே குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் அந்த பெண்ணை கட்டிவைத்து அவரின் கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டு, அச்சிறுமியையும் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கடுமையான இரத்தபோக்கினால் துடித்த பெண்ணின் சத்தம் கேட்டு வந்த கிராமவாசிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து காவல்துறை கூறுகையில்,” பெண்ணின் கண்ணில் குச்சியை சொருகி சென்ற குற்றவாளி எம்.டி சமீம் என அடையாளம் காணப்பட்டு கைது செய்துள்ளோம். இந்த சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது பாலியல் வன்கொடுமைக்காகச் செய்யப்பட்ட குற்றமா இல்லையா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கதிஹார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மீண்டும் பார்வை கிடைக்குமா என மருத்துவர்களிடம் கேட்டபோது அது பற்றி தற்போது எதுவும் சொல்லமுடியாது எனக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.