புதுடெல்லி,
தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் ஹரிஷ் சவுகானுக்கு அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.ராஜு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் 29-ந் தேதி புதிய வன பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தாமலே அந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டின் வன பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாற்றாக இதை கொண்டு வந்துள்ளனர்.
வனப்பகுதி நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடும்போது, கிராம சபையின் ஒப்புதலை பெற வேண்டும் என்று 2006-ம் ஆண்டின் வன உரிமை சட்டம் கூறுகிறது. ஆனால், இப்போது வெளியிடப்பட்ட புதிய வன பாதுகாப்பு விதிமுறைகளில் அந்த சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
வனப்பகுதி நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடும்போது, கிராம சபையின் ஒப்புதலை பெறவேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால், பழங்குடியினர் மற்றும் வனத்தில் குடியிருக்கும் இதர மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பகுதியில் மோதலை உருவாக்கி விடும்.
ஆகவே, பழங்குடியினர் உரிமைகளை பறிக்கும் இந்த விதிமுறைகளை பொதுநலன் கருதி வாபஸ் பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும், புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்தை பெறுமாறும், நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.