பொன்னியின் செல்வன் கதையில் வரும் தமிழ் நாட்டின் அத்தனை முக்கியப் பகுதியையும் உங்கள் விகடன் தனது வாசகர்களோடு பயணம் செய்ய விரும்பியது. அதனால் கடந்த 2019 – 2020-ம் ஆண்டுகளில் மூன்று முறை பயணித்தும் வந்தது. இப்போது நான்காம் முறையாக உங்களோடு பயணிக்கவும் உள்ளது.
எழுபது ஆண்டுகளாகத் தமிழர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஒரே புதினம் பொன்னியின் செல்வன். இந்தக் கதை வெளியானதில் இருந் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளும் வரலாற்று ஆசிரியர்களும் தோன்றினர் என்பது உண்மை. அதுமட்டுமா, பிற்காலச் சோழர்களின் சிறப்புகளும் செல்வாக்கும் அறிய வந்ததும் இந்த கதையால்தான் எனலாம். இன்று பலரும் வரலாற்று ஆய்வாளர்களாக ஊர்தோறும் சென்று பல வரலாற்றுக் கண்டுபிடிப்புகளைத் தொடர்வது எல்லாம் இந்த கதை உருவாக்கியத் தாக்கத்தால் தான் என்று துணிந்து கூறலாம்.
எத்தனை காலங்கள் மாறினாலும் இன்றும் பிரமிப்பையும் புதுமையையும் அளிக்கக் கூடியது இந்த புதினம். வயது வித்தியாசமின்றி எல்லோரையும் கவரக்கூடிய அம்சம் கொண்ட புதினம் இது என்பதும் விசேஷம். இன்று பல பிரசுரங்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வெளியிட்டாலும் தரத்திலும் நேர்த்தியிலும் சிறந்து விளங்குவது விகடன் பிரசுரம் வெளியிடும் பொன்னியின் செல்வனே என்பது வாசகர்களின் கூற்று. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம் என 5 பாகங்களாக, 300-க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது இந்த புதினம்.
வாணர்குல வந்தியத்தேவனில் இருந்தும் தொடங்கும் இந்த கதையைப் படிக்க படிக்க சோழ நாட்டில் இருப்பது போன்ற எண்ணங்களும் காலசக்கரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்ற மாயமும் நிகழ்வது நிச்சயம். இந்த புதினத்தில் அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜச் சோழன் பதவி ஏற்குமுன் இளவரசனாக இருந்த காலகட்டத்தை மட்டுமே கூறுகின்றது. அருண்மொழி 19 வயதிலேயே ஈழப்போருக்குச் சென்றதையும் அவனுக்கு உதவியவர்களையும் இந்த புதினம் விளக்குகிறது.
அன்பில் செப்பேடு, திருப்புறம்பியம், திருவாலங்காட்டு செப்பேடுகளில் உள்ள தகவல்களைக் கொண்டே இந்த புதினத்தை கல்கி எழுதி உள்ளார். குறிப்பாக திருவாலங்காட்டு செப்பேட்டில் ‘விண்ணுலகுக்குச் செல்ல விரும்பிய ஆசையால் ஆதித்தன் மறைந்தான். கலியினால் உண்டான காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை பதவியேற்குமாறு குடிகள் வேண்டினர். ஆனால் க்ஷத்திரிய தர்மத்தை அறிந்த அருண்மொழி அரச பதவியை ஒதுக்கினான். தன்னுடைய சிறிய தந்தை அவ்வரச பதவியை விரும்புவதை அறிந்து, அவர் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் கூறி அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்’ என்கிறது. இதை சகலருக்கும் எளிமையாகச் சொல்லவே கல்கி பொன்னியின் செல்வன் எனும் இந்த கதையை சில உண்மை பாத்திரங்களையும் சில கற்பனைப் பாத்திரங்களும் கொண்டு கற்பனையும் உண்மையும் கொண்ட இந்த கதையை எழுதினார்.
அவரே எதிர்பாராத வகையில் இந்த காவியம் பெரும் வெற்றி பெற்றது. காலம் கடந்தும் சோழர்களின் மீது பற்று கொள்ள வைக்கிறது. இந்த புதினத்தின் அவிழ்க்க முடியாத புதிராக இன்றும் இருப்பது ஆதித்த கரிகாலன் கொலைச் சம்பவம். இந்த கொலையின் சூத்திரதாரி யார் என்பது இன்றும் விவாதத்துக்கு உரிய விஷயமாக உள்ளது. ‘சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன், ரேவதசக் கிரம வித்தன்’ என கூலிகளின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் ஏவியவர் யார் என்ற கேள்வி இன்னும் அப்படியே உள்ளது.
இதுநாள் வரை சோழர்கள் பற்றியோ, வரலாற்றைப் பற்றியோ உங்களுக்கு எந்த ஆர்வமும் அறிவும் இல்லாமல் இருந்தால், ஒருமுறை இந்த புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்கள் மனநிலை நிச்சயம் மாறி விடும். வரலாற்றைத் தேடி ஊர்தோறும் சென்றுவிடுவீர்கள் என்பதே இந்த புதினத்தின் வெற்றி எனலாம். அந்தவகையில் பொன்னியின் செல்வன் கதையில் வரும் தமிழ் நாட்டின் அத்தனை முக்கியப் பகுதியையும் உங்கள் விகடன் தனது வாசகர்களோடு பயணம் செய்ய விரும்பியது. அதனால் கடந்த 2019 – 2020-ம் ஆண்டுகளில் மூன்று முறை பயணித்தும் வந்தது. இப்போது நான்காம் முறையாக உங்களோடு பயணிக்கவும் உள்ளது.
அதன்படி 2022 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில், சென்னை அண்ணாசாலை – விகடன் அலுவலகத்திலிருந்து பயணம் தொடங்கும். மொத்தம் 3 நாள்கள் (ஆகஸ்ட் 12, 13, 14). நடைபெற்று, ஆகஸ்டு 14 இரவில் கோடியக்கரையில் நிகழ்வுகள் நிறைவடைந்து சென்னைக்குப் புறப்படுகிறோம்.
முதல் நாள் ஆகஸ்ட் 12 மதியம் (வெள்ளிக்கிழமை): வீராணம், காட்டுமன்னார்கோவில், கடம்பூர்க் கோயில்கள் என 5 இடங்கள் செல்கிறோம். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் விவரம் கூறும் கல்வெட்டு இதில் சிறப்பம்சம்.
இரண்டாம் நாள் ஆகஸ்ட் 13 (சனிக்கிழமை): பழையாறை, உடையாளூர், திருப்புறம்பியம் என 6 இடங்கள். ராஜராஜன், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைகள், விஜயாலயன் புகழ் பாடும் திருப்புறம்பியம் இதில் சிறப்பானவை.
மூன்றாம் நாள் ஆகஸ்ட் 14: தஞ்சை, கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் என மூன்று இடங்கள். இதில் ராஜராஜன் மெய்கீர்த்தி கல்வெட்டு சிறப்பு.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிடுவது மட்டுமின்றி, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் வழிகாட்டலுடன் அமைகிறது இந்தப் பயணம். மேலும், பாரம்பர்யக் கலைகள், சரித்திரம் பேசுவோம், கலைகள் சொல்லும் கதைகள், களறியாட்டம் என இன்னும் சிறப்பான அனுபவங்களுடன் சுவாரஸ்யத்தை அள்ளித் தரப்போகிறது இந்த யாத்திரை.
தமிழகத்தின் பெருமை சொல்லும் இந்த சிறப்பான பயணத்தில் நீங்களும் பங்குகொள்ளுங்கள். சோழர்களின் ஆன்மாவோடு கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்!
முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404