கொடைக்கானலில் மருத்துவக் குணம் வாய்ந்த, ‘புவிசார் குறியீடு’ பெற்ற மலைப் பூண்டு போதிய விளைச்சலும் இன்றி, விலையும் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் சிங்கப்பூர், மேட்டுப்பாளையம் ரக மலைப் பூண்டு சாகுபடி நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் ரக பூண்டுக்கு மருத்துவக் குணம் இருப்பதால், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். காரத்தன்மையும் அதிகம். 6 முதல் 10 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இதேபோல், மேட்டுப்பாளையம் ரகத்தை விதைப் பூண்டுக்காக பயிரிடுகின்றனர். இதனை, வெளிமாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
இம்மலைப் பகுதியில் விளையும் பூண்டை தேனி மாவட்டம், வடுகபட்டி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக, சிங்கப்பூர் ரக பூண்டு விளைச்சல் பாதித்துள்ளது.
இதனால் வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. இதே போல், வெளிமாநில விவசாயிகள், வியாபாரிகள் வராததால் மேட்டுப்பாளையம் ரக விதைப் பூண்டு ஒரு கிலோ ரூ.200 வரை விற்ற நிலையில் தற்போது ரூ.10-க்கு கூட விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விலை சரிவால் நஷ்டம்
கவுஞ்சியைச் சேர்ந்த விவசாயி கணேசன் கூறுகையில்,” ஒரு மூட்டை (100 கிலோ) பூண்டு ரூ.30 ஆயிரத்துக்கு விற்று வந்த நிலையில், தற்போது மூட்டை ரூ.10 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது. நான்கு ஏக்கரில் மலைப்பூண்டு பயிரிட்டுள்ளேன். விலை சரிவால் ரூ.3 லட்சம் கிடைக்க வேண்டிய இடத்தில் ரூ.50 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பெருத்த நஷ்டம் தான்” என்றார்.
விலை நிர்ணயம் தேவை
மன்னவனூரை சேர்ந்த விவசாயி வல்லரசு கூறுகையில்,”வடுகப்பட்டி சந்தைக்கு வியாபாரிகள் வராததாலும், வெளிமாநிலப் பூண்டு வரத்து அதிகரிப்பாலும் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, மலைப் பூண்டுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.