புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி நாடு முழுவதும் அகில இந்திய மருத்துவ கல்விக்கான இளநிலை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதில், 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தரவிறக்கம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், கேரளா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள், நீட் தேர்வை 4 முதல் 6 வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கியூட், நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு இடையிலான நாட்கள் குறைவாக இருக்கின்றன. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களால் திட்டமிட்டபடி தேர்வில் கலந்து கொள்ள இயலாது. எனவே, தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.நீதிபதி சஞ்சீவ் நருலா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீட் தேர்வு தேதி அட்டவணை கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது ஏன் வழக்கு தொடரப்படுகிறது?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏப்ரலில் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இப்போதுதான் வழங்கப்படுகிறது. இப்போதுதான் மழை போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. அதனால்தான், தேர்வை தள்ளிவைக்க கோருகிறோம்,’ என்றார்.ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, ‘பருவமழை காலம் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப நாட்டில் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கும். அதை காரணம் காட்டி, பல லட்சம் மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வை தள்ளி வைக்க முடியாது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்,’ என உத்தரவிட்டார்.