க. சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா கடந்த 5 ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டு விழா நடைபெற்றது. பிறகு 6ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு மண்டகப்படியும் கடந்த 12ஆம் தேதி பொங்கல் வைத்து இரவு குதிரை வாகனத்தில் செல்லி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி நேற்று காலை 11.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டுதலும் நடைபெற்றது. செல்லியம்மன் கோவிலில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் தேரை வடம் பிடித்து பொது சாவடி வரை இழுத்தனர். பிறகு பொது சாவடியிலிருந்து ரெட்டியார் மண்டி வரை ரெட்டியார் மக்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று பிறகு பொது சாவடியில் கொண்டு வந்தனர்.
பொது சாவடியில் இருந்து முருகன் கோயில் வரை முத்தரையர் இன மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பிறகு தாழ்த்தப்பட்ட பிரவினரின் மண்டிக்கு 20 மீட்டர் தூரத்தில் உள்ளபோது அவர்கள் மண்டி வரை தேர் இழுப்பதற்கு அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு சமூகத்திற்கும் இடையில் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் குந்தலிங்கம் தலைமையில் லால்குடி துணை கண்காணிப்பாளர் சீதாராமன் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பரவச தேவன் மற்றும் லால்குடி வட்டாட்சியர் சிஸிலினாசுகந்தி மற்றும் அறநிலைத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்த் இவர்கள் முன்னிலையில் இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரு சமூகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தையில் எந்த சுமூகமும் ஏற்படாத நிலையில் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் குந்தலிங்கம் தலைமையிலான காவல்துறையும் வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்து செல்லியம்மன் கோவிலில் நிலை நிறுத்தினர்.
இதனால் 31 வருடங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட செல்லியம்மன் தேர் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பாதியில் நின்ற தேரை அரசு அதிகாரிகள் இழுத்த நிறுத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”