வலுவடைந்து வரும் பருவ மழையால், தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் ஏராளமான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலா சார்ந்த தொழில்களில் தினமும் ரூ.10 லட்சம் அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக – கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. கேரள வனத்துறையின் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் தேக்கடி படகுப் போக்குவரத்து, ஜீப், யானை சவாரி, பசுமை நடை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ந்த பருவ நிலையால் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
இவர்களுக்காகவே தற்காப்புக் கலையான களரி, கதகளி நடனம், பசுமை நடை போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா சார்ந்து ரிசார்ட், ஹோட்டல்கள், ஜீப்கள், நேந்திரம் சிப்ஸ், ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட ஏராளமான உப தொழில்கள் நடக்கின்றன.
தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தேக்கடி படகு இயக்கம், கேரள போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் குமுளி, தேக்கடி பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இது குறித்து வியாபாரி ஹக்கீம் கூறியதாவது: வருவாய் இல்லா ததால் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு, ஊழியர்களுக்கு தற்காலிகமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த வியாபாரிகள் எங்களுக்குப் பொருட்களை கடனுக்குத் தருவதில்லை. சுற்றுலாப் பகுதி என்பதால் கடை வாடகையும் இங்கு அதிகம். தற்போது வியாபாரம் இன்றி பலரும் சிரமத்தில் உள்ளனர் என்றார்.
கேரள வியாபாரிகள், விவசாயிகள் ஏகோபன சமிதி தலைவர் மஜோ கரிமுட்டம் கூறுகையில், கரோனாவால் ஏற்கெனவே 2 ஆண்டுகள் வியாபாரம் பாதித்தது. தற்போது தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வராததால் தினமும் ரூ.10 லட்சம் அளவுக்கு வருவாய் பாதித்துள்ளது. அடுத்த மாதம் மழை குறைந்ததும் இந்நிலை மாறும். ஓணம், தீபாவளி நேரங்களில் விற்பனை களை கட்டும் என்றார்.