வாசகர்களுக்கு வணக்கம்! அமைதியான ஆட்சி மாற்றம் நிகழட்டும்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ மாலத் தீவுகளுக்குத் தப்பியோடி இருக்கிறார். ஜூலை 13-ம் தேதி அவர் ராஜினாமா செய்வதாகத் தன்னிடம் உறுதி அளித்ததாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் முன்னதாக சொல்லியிருந்தார். சொன்னபடி அந்தத் தேதியில் கோத்தபய தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதற்கு முன்பாக, ஜூலை 9-ம் தேதி மக்கள் போராட்டம் வெடித்து, ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையில் புகுந்து அதை ஆக்கிரமித்தனர். வேறு வழியின்றி அங்கிருந்து கோத்தபய வெளியேறினார். அப்போதே அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டத்தின்படி முப்படைகளுக்கும் அதிபரே தலைவராக இருக்கிறார். அந்தப் பதவி தனக்குத் தந்திருக்கும் பாதுகாப்பு கருதியே கோத்தபய ராஜினாமா செய்யவில்லை. கடற்படையின் பாதுகாப்பில் அவர் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்டது. அன்றே அவர் தனி வழியில் கொழும்பு விமான நிலையம் சென்று வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முயன்றார். ஆனால், குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பான தனி வழியை விமான நிலையத்தில் ஒதுக்கித் தர மறுத்தனர். இதேபோல கோத்தபயவின் சகோதரரான பசில் ராஜபக்‌ஷே ஒரு தனி விமானத்தின் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

கோத்தபய ராஜபக்‌ச

இந்தச் சூழலில், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் யாரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே மாலத்தீவுகளுக்குச் சென்றுவிட்டார் கோத்தபய. அங்கிருந்து அவர் சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும், சிங்கப்பூர் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான அவரின் அண்ணன் மகிந்த ராஜபக்‌ஷ எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்திருக்கிறார். ஏற்கெனவே பிரதமர் பதவியில் இருக்கும் அவரையும் பதவி விலகுமாறு போராடும் மக்கள் கேட்கிறார்கள். மக்களின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாடு ஓடிய ஓர் அதிபர் செய்த இந்த நியமனம், எந்த வகையிலும் பிரச்னைக்குத் தீர்வு கொடுக்கப் போவதில்லை. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி மட்டுமே இருக்கிறார். அந்த ஒற்றை எம்.பி-யும் அவர்தான். மக்கள் ஆதரவும் இல்லாத, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமும் இல்லாத ஒருவரை தங்களின் பொம்மை முகமாக ராஜபக்‌ஷ குடும்பத்தினர் காட்டுகின்றனர்.

இலங்கை

மூன்று மாதங்களாக அமைதியிழந்து கிடக்கிறது இலங்கை. இன்று இலங்கையை முடக்கியிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களை சரி செய்ய சர்வதேச சமூகத்தின் உதவி அவசியம். இலங்கை இறுதிப் போரின்போதும், அதற்கு முன்பாகவும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் இதே சர்வதேச சமூகம் கண்டித்தபோது, அதை அலட்சியம் செய்தவர்கள்தான் இதே ஆட்சியாளர்கள். இன்று அவர்கள்தான் இலங்கை மக்களைத் தவிக்க விட்டு, வீதியில் நிறுத்தியுள்ளனர். அவர்கள் செய்த தவறுகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்க நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும்.

மக்களின் இந்தப் போராட்டமானது ராஜபக்‌ஷக்களுக்கு எதிரானது மட்டுமில்லை, ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல்வாதிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். நாட்டின் நிலையை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமே இப்போது இலங்கை அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

இலங்கை

அமைதியிழந்து வீதிக்கு வந்திருக்கும் மக்கள் நிம்மதியாக வீடு செல்வதற்கு ஏற்றதான தீர்வு ஒன்றை அமைதியான வழியில் இலங்கை அரசியல்வாதிகள் வழங்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.