“ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” – மக்களவையில் ‘வார்த்தைத் தடை’ குறித்து கமல் காட்டம்

சென்னை: “ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” என்று மக்களவையில் பேசுக்கூடாத வார்த்தைகள் என இடப்பட்டுள்ள பட்டியல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த வார்த்தைகளை எம்.பி.க்கள் பயன்படுத்தினால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும்.

பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா?

வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே! #mnm4democracy” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.