புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக 2 தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகையில் தற்போது 96 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 87 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்
இதுமட்டுமின்றி, 18 வயதுக்கு மேற் பட்டவர்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என மத்திய அரசு தெரிவித்தது. 2-வது டோஸ் போடப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் போடப்படுகிறது. முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களில் 16 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து செலுத்திக் கொள்ளலாம் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 77 கோடி பேரில் ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால், கரோனா பூஸ்டர் தடுப்பூசிகளை அனைவருக்கும் இலவசமாக போட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜூலை 15 (நாளை) முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் மையங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று அறிவித்தார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான கால இடைவெளி, 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக அண்மையில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிக முக்கியமானது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போட அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும்’ என கூறியுள்ளார்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்ட போது, “மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தவுடன், தமிழகத்தில் நாளை முதல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மையங்களில் 18 வயது முதல் 59 வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படும். தமிழக அரசிடம் தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது” என்றார்.
புதிதாக 16,906 பேருக்கு தொற்று: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. கரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 25,519 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 32,457ஆக உயர்ந்துள்ளது.