அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடங்கியவுடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, “அதிமுகவின் கட்சி விதிமுறைகளை படி தலைமை நிலைய செயலாளர்தான் தலைமைக் கழகத்தின் பொறுப்பாளர். தலைமை அலுவலக சொத்தை பொறுத்த வரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் தக்க பாதுகாப்பு வழங்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
குறுக்கிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மொத்த இடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என்பது தவறு என்றும் தெரிவித்தார். அப்போது நீதிபதி அவர்கள், எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது வாதத்தை முடித்த பிறகு பதில் அளிக்க வேண்டும் என்று காவல் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு : “இரு தரப்பு மோதல் முற்றியதால் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றவர்களை காவல் துறையினர் தடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆணித்தரமான வாதத்தை முன் வைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பும் வாதம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கில் சிசிடிவி, வீடியோ காட்சிகள் அடங்கிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.