வேகம் எடுத்துவிட்டார் விக்ரம். `பொன்னியின் செல்வன்’ விழாவின்போது மருத்துவமனையில் இருந்தவர், பின் நலமாகி வீடு திரும்பினார். அதன் பின் ‘கோப்ரா’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். ”சின்ன அசௌகரியத்தால் மருத்துவமனை செல்ல நேர்ந்தது. ஆனால் அதனை இந்த அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இதனால் என்னை நேசிக்கும் சிலர் சங்கடங்களைச் சந்தித்தனர். அவர்கள் அனைவருக்காகவும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன்.”என்று பேசினார் விக்ரம்.
சரி விஷயத்துக்கு வருவோம். பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் உருவாக உள்ள படத்துக்கான லொகேஷன் தேடல் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. கிபி 17ம் நூற்றாண்டின் கதைக்களம் அது. எனவே அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இடங்களைத் தேடி பா.ரஞ்சித்தின் உதவியாளர்கள் லொகேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ரஞ்சித்தும் பெங்களூரு சென்று வந்தார். கேரளா, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள லொகேஷன்கள் எதுவும் திருப்தி தரவில்லை என்பதால் திருவண்ணாமலை பக்கம் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்திற்கான பூஜை நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது. சென்னையில் உள்ள என்.எஃப்.டி.சி வளாகத்தில் நடக்கும் பூஜையில் விக்ரம் பங்கேற்கிறார். படத்தின் ஹீரோயினாக நடிக்க முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள்ள பெண் தேவை என்பதால், ‘காலா’ ஹீமா குரேஷி போன்ற ஹீரோயின் தேடுதல் நடந்து வருகிறது. படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துள்ளதால், பூஜையை முடித்த கையோடு நடிகர்கள் தேர்வையும் நடத்த உள்ளனர். அதன்பின், அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். இது 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.