Elon Musk: `டெஸ்லாவுக்கு இந்த நிலையா!' 229 பேரை பணியிலிருந்து நீக்கியது ஏன்? ரகசிய மெயிலின் பின்னணி

உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. டெஸ்லா கார்கள் வாங்குவது ஒரு என்பது ஒரு ப்ரஸ்டீஜியஸான விஷயம். ஹாலிவுட் நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள், தனவான்கள், சாதாரண மக்கள் வரை டெஸ்லா ஓட்டுவதைப் பெருமையாகவே கருதுகிறார்கள்.

கடந்த ஆண்டில் கடுமையான செமி கண்டக்டர் பிரச்னை, சப்ளை செயின் பிரச்னை, கோவிட் பிரச்னை என்று ஏகப்பட்ட பிரச்னைகளால், எல்லா நிறுவனங்களும் கார்களைத் தயாரிப்பதில் பின்தங்கிய வேளையிலும், சுமார் 9,36,222 யூனிட்களை உலகம் முழுதும் விற்பனை செய்து சாதனை புரிந்திருக்கிறது டெஸ்லா. அப்படிப்பட்ட டெஸ்லாவில் இருந்துதான் ஓர் அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

அதாவது, அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள San Mateo எனும் இடத்தில் இயங்கி வரும் டெஸ்லா தொழிற்சாலையில் இருந்து சுமார் 229 பணியாட்களை பணியில் இருந்து அதிரடி நீக்கம் செய்ய இருக்கிறார்கள். இதற்குச் சில வாரங்கள் முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ரிவியன் ஆட்டோமோட்டிவ் எனும் கம்பெனி, இதேபோன்று தனது தொழிற்சாலையில் இருந்து ஆட்களைப் பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து, டெஸ்லாவும் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

டெஸ்லா

உலகம் முழுவதும் டெஸ்லாவில் சுமார் 99,000–க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் இரண்டு தயாரிப்புத் தொழிற்சாலைகள் டெஸ்லாவுக்கு இருக்கின்றன. கூடவே ஷாங்காய், சீனா என்று பல நாடுகளிலும் ஃபேக்டரி இருக்கிறது. அண்மையில்கூட ஜெர்மனியில் பெர்லினிலும் ஒரு EV தயாரிப்பு ஃபேக்டரியை நிறுவியது டெஸ்லா. ஆசியாவில் மிகப் பெரிய தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்கிற ஐடியாவில் இந்தோனேஷிய அரசாங்கத்துடனும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். உலகின் உயர்தரத் தொழில்நுட்பத்துடன், கார்களின் உதிரி பாகங்களையும் கூடவே தயாரிக்கும் பல்வேறுவிதமான கம்பெனிகளுடன் ஒரு GigaFactory ஆகக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது டெஸ்லா.

இப்படிப்பட்ட நேரத்தில் டெஸ்லாவில் LayOff என்பது, ‘டெஸ்லாவுக்கே இந்தக் கதியா’ என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. டெஸ்லாவின் இந்தப் பணி நீக்க முடிவு தொடர்பாக இப்படியும் இருக்கலாம் என்றும் ஒரு காரணம் சொல்கிறார்கள். அதாவது, சான் மாட்டியோ தொழிற்சாலையில்தான் ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கான தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்டோ பைலட் சிஸ்டம் என்பது டிரைவரை நம்பாமல் கார் ஓடும் அட்டானமஸ் சிஸ்டம். இதில் லெவல்–2–வில் இருக்கிறது இருக்கிறது டெஸ்லா.

டெஸ்லா

அதாவது, தானாக பிரேக் பிடிப்பது, தானாக பார்க்கிங் ஆவது, தானாக ஆக்ஸிலரேட்டர் மிதிப்பது என்று டிரைவர்லெஸ் காராக இயங்கும் தொழில்நுட்பம்தான் இது. ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ள பல விபத்துகளை ஆராய்ந்து பார்த்ததில், டெஸ்லாவின் இந்த ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறால்தான் பல விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது நிரூபணமாகி இருக்கிறது. இதில் பல உயிர் பலிகளும் அடங்குமாம். இப்படி ஆட்டோ பைலட் சிஸ்டத்தில் பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்துதான், அந்தத் துறையில் பணிபுரியும் சிலரை டெஸ்லா செட்டில்மென்ட்டோடு வீட்டுக்கு அனுப்பப் போகிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது பற்றி டெஸ்லாவிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால், கடந்த ஜூன் மாதம் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது மேனேஜருக்கு ஒரு ரகசிய மெயில் அனுப்பியது வெளியே கசிந்திருக்கிறது. அதில் இப்படிச் சொல்லியிருந்தாராம் மஸ்க். ‘‘நமது அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. உலகம் முழுவதும் டெஸ்லாவில் உள்ள பணியாளர்களில் இருந்து 10% ஒர்க்ஃபோர்ஸைக் குறைக்கத் திட்டம் தீட்டலாம்!’’ என்று எலான் மஸ்க் வருத்தப்பட்டிருக்கிறார்.

தனது மேனேஜருக்கு எலான் மஸ்க் இதற்கு முன்பு அனுப்பிய மெயிலில், டெஸ்லாவில் ஊழியர்கள் நிரம்பி வழிவதாகவும், முதலில் அவர்கள் சம்பளத்தைக் குறைக்கலாமா என்பது பற்றியும் கலந்தாலோசித்து இருக்கிறாராம்.

உலகம் முழுதும் செமி கண்டக்டர் சிப் பிரச்னை, கோவிட் பிரச்னை என்று எந்தப் பிரச்னை வந்தாலும் தூசி தட்டி கார்களை டெலிவரி செய்து கொண்டிருந்த டெஸ்லாவுக்கே இந்த நிலைமையா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.