விருதுநகர் அருகே மனு அளிக்க வந்த பெண்ணை காகிதத்தால் தலையில் தட்டிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்திய நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அண்ணாமலையின் கருத்தில் முரண்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், பாலவனத்தம் கிராமத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்றிருந்தபோது, அங்கே மனுக்கொடுக்க வந்த பெண் ஆவேசமாக தனது குறைகளை சொல்லியபடி மனுக் கொடுத்தபோது, அமைச்சர் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறும் விதமாக அந்த பெண்ணின் தலையில் கையில் இருந்த காகிதத்தால் அடித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இந்த செயலுக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தீர்வு கொடுக்க வந்த பெண்ணை aமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்தார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்ரு குறிபிட்டுள்ளார்.
இந்த நிலையில், வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. இயல்பாக நடந்து கொண்டதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் என தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் ரூ. 16 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருநெல்வேலி எம்.எல்.ஏ-வும் பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதிமுக கோஷ்டி பூசல் விவகாரம் பாஜகவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை.
அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது.
எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவை இல்லை. ஒருவர் எதிர்ப்பு இருந்தாலும் எதிர்ப்பு எதிர்ப்பு தான். அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நல்லதாக இருக்கும். அதிமுக தலைமைக்கு யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு விதித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. இயல்பாக நடந்து கொண்டதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மனு அளிக்க வந்த பெண்ணை காகிதத்தால் தலையில் அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்திய நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”