ஆரம்பக் காலத்தில் இந்தியா விவசாயத்தை நம்பி இருந்தது. அதன்பிறகு மெல்ல சேவைத் துறையில் கவனம் செலுத்தியது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு என்பது வெகுவாக குறைந்துகொண்டே வந்தது. உற்பத்தித் துறை என்றாலே சீனா உள்ளிட்ட நாடுகளே ஞாபகத்துக்கு வரத்தொடங்கின.
இந்த நிலையில், காண்ட்ராக்ட் உற்பத்தித் துறையில் ஒரு நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்தப் பெயர் பிரபலம். அது டிக்ஷன் டெக்னாலஜீஸ்.
1989-ம் ஆண்டு கார்டுலெஸ் போன்களைத் தயாரிக்க திட்டமிட்டார் சுனில் வச்சானி (Sunil Vachani). ஆனால், இந்த முயற்சி பெரும் தோல்வியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அப்பாவின் டிவி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தார். இவரது அப்பா, வாட்சன் என்னும் கலர் டிவி தொலைக்காட்சி ஆலையை வைத்திருந்தார். இந்தியாவில் முதல் வண்ணத்தொலைகாட்சி பெட்டி நிறுவனம் இதுதான்.
கார்ட்லஸ் போன் டு கான்ட்ராக்ட் உற்பத்தி…
லண்டனில் படித்து முடித்தபிறகு அப்பாவின் ஆலையில் சில ஆண்டுகள் வேலை செய்தார். பிறகு தனியாக தொழில் தொடங்கலாம் எனத் திட்டமிட்டார். ‘‘தொழில்முனைவோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறே குழந்தைகளுக்கு எந்த அனுபவத்தையும் தரமால் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்துவதுதான். ஆனால், நான் சுதந்திரமாக செயல்பட என் தந்தை அனுமதித்தார். அதுதான் என்னை ஜெயிக்க வைத்தது’’ என சுனில் கூறியிருக்கிறார்.
அப்போது இந்தியாவில் டெக்னாலஜி வேகமாக வளர்ந்த காலம். அப்பா, உற்பத்தித் துறையில் இருக்கிறார். இருந்தாலும் ஏற்கெனவே ஒருமுறை தோல்வி. இந்த நிலையில், சர்வதேச அளவில் பிரபலமாக இருந்த கான்ட்ராக்ட் உற்பத்தியில் களம் இறங்கினார். அப்பாவிடம் ரூ.20 லட்சத்தைக் கடனாக பெற்று 1993-ம் ஆண்டு டிக்ஷன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் சுனில்.
இதில் லக்கி கோல்ட்ஸ்டார் (எல்ஜி) என்னும் நிறுவனத்துக்கு சி.ஆர்.டி தொலைகாட்சிப் பெட்டிகள் அமைப்பதற்கான ஆர்டர் கிடைக்கிறது. இதுதான் முதல் ஆர்டர். ஒரு தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்புக்கு 1.5 டாலர் மட்டுமே லாபம் கிடைக்கும் என்று தெரிந்தாலும் துணிந்து இந்த ஆர்டரை எடுத்தார்.
டி.வி உற்பத்தி செய்யத் தொடங்கிய இந்த நிறுவனம் டிவிடி, ஆடியோ பிளையர்கள், விசிஆர் என பல நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை செய்து கொடுக்கத் தொடங்கியது. உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கியது.
தோல்வியிலிருந்து கற்ற பாடங்கள்…
ஒப்பந்த அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு செய்துகொடுக்கத் தொடங்கியது, டிவி மட்டுமல்லாமல், அனைத்து விதமான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களையும் தயாரிக்கத் தொடங்கியது. மற்றவர்களுக்காகத் தயாரிக்கும்ப்போது ஏன் நமக்காக தயாரிக்கக்கூடாது என்னும் எண்ணம் தோன்றுவது இயல்பு. அதனால் சொந்த பிராண்டினை அறிமுகம் செய்தது.
ஆனால், விரைவில் அதிலிருந்து வெளியேறியது. அதற்கு பல காரணங்கள் உண்டு.
முதலாவது, வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு நாடு முழுவதும் நெட்வொர்க் இருக்க வேண்டும். சரியான மார்கெட்டிங் உத்தி இருக்க வேண்டும். இதுபோல, பல விஷயங்கள் இருந்தால்தான் வெற்றியடைய முடியும். இதனைவிட முக்கியம், நமக்கு வாடிக்கையாளர்களாக இருக்கும் நிறுவனத்துடனே போட்டியிட வேண்டி இருக்கும். இந்தப் போட்டியால் வாடிக்கையாளர்களை இழந்து, ரீடெய்ல் மற்றும் ஒப்பந்த தொழில் எதுவுமே இல்லாமல் போகக்கூடிய சூழல் உருவாகும் என்பதைக் கணித்த டிக்ஷன் இரு ஆண்டுகளில் அந்த பிரிவில் இருந்து வெளியேறியது.
இது முக்கியமான திருப்புமுனை என சுனில் கூறியிருக்கிறார். இந்த முடிவுக்குப்பிறகு எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதும் எது இலக்கு என்பதும் எங்களுக்கு புரிந்தது என பேசி இருக்கிறார்.
இந்த முடிவுக்குப் பிறகு ஒவ்வொரு பிரிவாக விரிவாகம் செய்யப்பட்டது. இதற்குக் கூடுதல் நிதி தேவைப்பட்டது. வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்தன. இருந்தாலும் நீண்ட கால பங்குதாரர் வேண்டும் என்பதால், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடம் நிதி திரட்டினார்.
இப்போது எலெக்ட்ரானிக்ஸ், மொபைல் போன், எல்.இ.டி விளக்குகள், வீட்டுக்குத் தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் என அனைத்துப் பொருள்களையும் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறது டிக்ஷன் டெக்னாலஜி.
அதிரடி ஐ.பி.ஒ….
2017-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஒ வெளியானது. பட்டியலான நாளில் 54% அளவுக்கு இந்த பங்கு உயர்ந்தது. 2017-ம் நிதி ஆண்டில் ரூ.2,499 கோடி அளவுக்கு இருந்த வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ.10,701 கோடிக்கு உயர்ந்தது.
இந்த நிறுவனம் சீன நிறுவனங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்துகொடுத்தது. சீன நிறுவனமான ஷாமிக்கு உற்பத்தி செய்துகொடுத்தது. அதனால் டிக்ஷன் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. அதனால் இந்தப் பங்கு கடுமையாக சரிந்தது. ஆனால், அரசின் பி.எல்.ஐ திட்டத்தின் காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறை பெரிய வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச உற்பத்தி மையம்…
எலெட்ரானிக்ஸ் உற்பத்தியில் சர்வதேச மையமாக இந்தியா உயரும். இந்தியாவிலே எலெட்க்ரானிஸ் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தவிர, சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு உற்பத்தி மையத்தை மாற்றும் முடிவை வைத்திருக்கின்றன. இந்தியாவில் போதுமான மனிதவளம் இருக்கிறது. அதைவிட அரசின் ஊக்குவிப்பும் இருப்பதால், உற்பத்தித் துறையில் இந்தியா முக்கியமான மையமாக மாறும். அதில் டிக்ஷன் கணிசமான இடத்தை தக்கவைக்கும் என தெரிவித்திருக்கிறார் சுனில்.
கடந்த சில ஆண்டுகளைப் போலவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 30% வளர்ச்சிக்குமேல் இருக்கும் என கணித்திருக்கிறார் சுனில். எலெக்ட்ரானிக்ஸ் அவுட்சோர்சிங் பிரிவில் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனமாக டிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
(திருப்புமுனை தொடரும்)