பொதுக்குழு தொடர்பாக ஜூன் 14-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்ததால், பிரச்னை பூதாகரமானது. இது பொதுக்குழுவில் எதிரொலிக்கும் என்பதால், அது குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
இதனால், திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பியிருந்த வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செய்த மேல்முறையீட்டு மனுவின், அடிப்படையில், “ஏற்கெனவே முடிவு செய்திருக்கும் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த முடிவும் பொதுக்குழுவில் எடுக்கக் கூடாது” என்று அதிகாலையில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் செல்லாது என்றும், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து புதிய தீர்மானத்துடன் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்யவே, அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் நடந்தேறியது.
அதன்படி, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற அச்சநிலையிலேயே இருந்த எடப்பாடிக்கு, நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியது. இதையடுத்து நடந்த பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதும், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடிக்கு அடுத்தடுத்து பிரச்னை வரிசைக் கட்டி நிற்கிறது.
சட்டமன்றத் தேர்தல் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அ.தி.மு.க. அதன்படி, சட்டமன்றத்தில் யார் எதிர்க்கட்சித் தலைவர் ஆக நியமிக்கப்படவேண்டும் என்று, அப்போதே பிரச்னையாகியிருந்தது. ஆதரவு அதிகமாக இருந்ததால், எடப்பாடியே எதிர்க்கட்சித் தலைவராகினார். ஓ.பி.எஸ் துணைத் தலைவராக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது, ஓ.பி.எஸ் வகையறாக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவரை துணைத் தலைவர் பதவில் இருந்து இறக்க சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடமும், நீதிமன்றத்தை ஓ.பி.எஸ் அணுகியிருப்பதால், கட்சி யாருடையது என்று முதலில் முடிவு செய்துவிட்டு, பின்னர், துணைத் தலைவர் பதவியை மாற்றியமைக்கலாம் என்று கூறி, இந்த விவகாரத்தைச் சபாநாயகர் கிடப்பில்போட வாய்ப்பு இருக்கிறது. அதேபோலதான், கட்சி அலுவலகம் சீல் திறப்பில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்றால், தி.மு.க அரசு இந்த பிரச்னையை இப்போதைக்கு முடிக்காது என்று ஆட்சி மட்டத்தில் இருந்து தகவல் வருகிறது.
அதேபோல, ஓ.பி.எஸ் தரப்பில் உள்ள வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் வரவழைத்து, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. இரட்டை இலை முடக்கப்பட்டால் அதை மீட்க பலகட்ட சட்டப் போராட்டங்களை எடப்பாடி தரப்பு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுடன் பல சமரசங்களையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும்.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க, தேர்தல் ஆணையம் பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும். அதற்காக டெல்லி தலைமையை எடப்பாடி தரப்பு அணுகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் கிரின் சிக்னல் கிடைக்கவில்லை. எடப்பாடிக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வரும்பட்சத்தில், பல பிரச்னைகளை ஒரே அடியாகத் தீர்க்க வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே, பொன்னையனின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி, புது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதனால், மா.செ-க்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, பொன்னையன் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும், கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் என பல தனிநபர்களைக் குறிப்பிட்டு பொன்னையன் பேசியது, உட்கட்சி பூசலுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக அந்த ஆடியோவில் தனக்குப் பின்னால் காய் நகர்த்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை, எடப்பாடி லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
அவர்களைக் களையெடுத்தாலும், எடுக்காவிட்டாலும், எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக நிச்சயம் அமையும். அதேபோல, ஒற்றைத் தலைமைக்காக எடப்பாடியிடம் பல ஸ்விட் பாக்ஸ்-களை பெற்ற நிர்வாகிகள், பிரச்னை வரும்போதெல்லாம் அதையே கேட்க வாய்ப்பு இருக்கிறது. இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி முன்னே கட்சி அளவிலேயே இவ்வளவு பிரச்னை அணிவகுத்து நிற்கிறது. இதுபோக, 4 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட விவகாரங்களை தி.மு.க அரசு தோண்டி எடுத்தால், பல பிரச்னைகளை அவர் சந்திக்கவேண்டிய அவசியம் வரும் என்கிறார்கள் விவகாரம் அறிந்தவர்கள்!