வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுக்க உதவி செய்யும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்கினால், தடையில் இருந்து இந்தியாவிற்கு சலுகை அளிப்பதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014ல் கிரிமீயாவை சட்ட விரோதமாக தன்னுடன் இணைத்து கொண்டதற்காகவும், 2016ல் அதிபர் தேர்தலில் தலையிட்டதற்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது. இதனை மீறி ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கிய துருக்கி மீது கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஐந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு இயந்திரங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களை தடுப்பதற்கு உதவியாக, தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்தை ரோ கண்ணா என்ற எம்.பி., கொண்டு வந்தார்.
தீர்மானம் தொடர்பாக அவர் கூறியதாவது: சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் இந்தியாவுடன் அமெரிக்கா இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு ஒத்துழைப்பை பலப்படுத்த முயற்சி செய்யவும், சீன எல்லையில் இந்தியா தன்னை தற்காத்து கொள்ளவும் முயற்சி செய்து வருகிறேன். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியமானது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement