கொழும்பு: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார். இதனிடையே, புதிய அதிபர் வரும் 20ம் தேதி தேர்வாவார் என தெரியவந்துள்ளது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய, மக்களின் போராட்டம் காரணமாக இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனாவுக்கு இமெயில் அனுப்பினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்று கொள்ளப்பட்டது.
முன்னதாக, மாலத்தீவு வந்த கோத்தபய, கடந்த 13ம் தேதி இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் இன்று பதவியேற்று கொண்டார். அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா முன்னிலையில் ரணில் பதவியேற்றார்.
இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பார்லிமென்ட் செயல்பாடுகளை நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் அடுத்த அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கேயின் பெயரும், பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசா பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement