பியாங்யாங்,
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களில் ரஷிய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், பல ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது.
இந்த சூழலில் ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை தனிநாடுகளாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தார். உலக நாடுகளும் இதை அங்கீகரிக்க வேண்டும் என ரஷியா வலியுறுத்தியது. எனினும் சிரியா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தன. இந்த நிலையில் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான வடகொரியா, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக தற்போது அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியாவின் வெளியுறவு மந்திரி சோ சன் ஹுய், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கில் உள்ள கிளர்ச்சி குழுக்களின் தலைவர்களுக்கு தனிதனியாக அனுப்பியுள்ள கடிதங்களில் இரு நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் வடகொரியாவின் முடிவையும், இருநாடுகளுடன் தூதரக உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான விருப்பத்தையும் தெரியப்படுத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைதொடர்ந்து, வடகொரியாவுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக அறிவித்த உக்ரைன் வெளியுறவு அமைச்சகம், வடகொரியாவின் இந்த முடிவு உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.