உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது இந்திய அரசு, முன்னதாக கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது.
ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரஷ்ய கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலவும் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டின் மொத்த கோதுமை உற்பத்தி சுமார் 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்தச் சூழலில் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், வங்கதேசம், ஓமன், யுஏஇ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியா கோதுமை ஏற்றுமதியை அனுமதித்துள்ளது.
உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இந்தியா கோதுமை ஏற்றுமதியில் பெரும் பங்குவகிக்கும் நாடு இல்லையென்றாலும் கூட உணவுச் சிக்கலில் தவிக்கும் நட்பு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யும் என்றார்.
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை உத்தரவுக்கு ஜி7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்தியாவோ தேசத்தின் நலனுக்கே முன்னுரிமை. நாங்கள் அதைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதியை சீர்படுத்தியுள்ளோம் என்று விளக்கியுள்ளது.
இந்நிலையில் உணவுப் பஞ்சத்தால் தவிக்கும் 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன்படி வங்கதேசத்திற்கு 0.1 மில்லியன் டன்கள் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தோனேசியாவுக்கும் 0.1 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளின் கோதுமை தேவை கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கோதுமை முக்கியமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த கோதுமை சாகுபடிப் பரப்பளவில், இந்த மாநிலங்களின் பங்கு 80 சதவீதமாகும்.