விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவிக்கேட்டு மனு அளிக்க வந்த கலாவதி எனும் பெண்ணை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனுக்கவரால் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்தார். மேலும் ஏழைப் பெண்ணை அடித்ததற்காக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதவி விலக வேண்டும், இல்லையெனில் பா.ஜ.க. சார்பில் வீட்டை முற்றுகையிடுவோம் என குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் வட்டத்தில் சர்ச்சையை கிளப்பிய இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் கலாவதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால் அதுவும் சர்ச்சைக்குள்ளானது. இந்தநிலையில் விருதுநகர் பா.ஜ.க.கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அமைச்சர் வீட்டைச்சுற்றி நான்கு திசைகளிலும், சுமார் 500 மீட்டருக்கு முன்னதாகவே நாலாபுரங்களிலும் மாவட்ட காவல் துறையின் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எந்தவொரு வாகனம் அமைச்சர் வீடு இருக்கும் பகுதி வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் வழக்கமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள், மாற்று வழியில் நகரை சுற்றி மல்லாங்கிணறு சென்றன.
பா.ஜ.க.வின் வீடு முற்றுகை அறிவிப்பை தொடர்ந்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டு பா.ஜ.க.வினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்தி மாலையில், விருதுநகர் பா.ஜ.க.கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சேர்ந்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வீட்டை முற்றுகையிடுவதற்காக பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு திரண்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இதனால் அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.