உலகம் முழுவதும் தற்போது ஓலா, உபர் உள்பட டாக்ஸி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனியார் டாக்சி நிறுவனத்தில் செல்லும் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்குறி எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தனியார் கேப் ஓட்டுனர்கள் தனியாக பயணம் செய்யும் பெண்களிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் 500 பெண்கள் உபர் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
500 பெண்கள் புகார்
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் சுமார் 500 பெண்கள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களை உபர் ஓட்டுநர்கள் மீது சுமத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது உபர் ஓட்டுனர்கள் அத்துமீறி அவர்களிடம் நடந்து கொள்வதாகவும் இது குறித்து ஏற்கனவே பலமுறை உபர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை செய்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உபர் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கைகள்
உபர் நிறுவனம் பாலியல் வன்கொடுமை குறித்த குற்றத்தை ஒப்புக் கொண்டாலும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என ஸ்லேட்டர் ஷுல்மேனின் பங்குதாரரான ஆடம் ஸ்லேட்டர் என்பவர் கூறியுள்ளார்.
கேமரா
உபேர் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய முடியும் என்றும், குறிப்பாக பாலியல் குற்றங்களை தடுக்க டாக்சிகளில் கேமரா பொருத்துவது, ஓட்டுநர்களின் பின்னணி குறித்து வலுவான விசாரணைக்கு பிறகே அவர்களை வேலைக்கு சேர்ப்பது ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என ஸ்லேட்டர் கூறியுள்ளார்.
பாதை மாறி சென்றால்
மேலும் ஓட்டுனர், வாடிக்கையாளர் செல்ல வேண்டிய பாதையில் இருந்து மாறி செல்லும்போது எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கான தொழில்நுட்பங்களை உபர் பயன்படுத்த வேண்டும் என்றும் ஸ்லேட்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழக்கு
அமெரிக்காவில் மட்டும் 500 பெண்கள் உபர் நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில் அவற்றில் 150 வழக்குகள் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உபர் அறிக்கை
வாடிக்கையாளரின் பாதுகாப்பை தவிர முக்கியமானது எதுவும் இல்லை என்றும் அதனால் புதிய பாதுகாப்பு அம்சங்களை உருவாகியுள்ளதாகவும் உபர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
தீவிர பாலியல் சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றாலும் நாங்கள் கண்டிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வோம் என்றும் இது எங்களுடைய முக்கிய பணிகளில் ஒன்று என்றும் உபர் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Uber sued by more than 500 female passengers including kidnapping claims
Uber sued by more than 500 female passengers including kidnapping claims | உபர் மீது 500 பெண்கள் வழக்கு.. அத்துமீறுகிறார்களா ஓட்டுனர்கள்?