‘மணிகர்ணிகா’ படத்தைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் இயக்கி நடிக்கும் படம் ‘எமர்ஜென்சி.’ ஜான்சியின் ராணி லட்சுமி பாய், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடித்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக ‘எமர்ஜென்சி’ படத்தில் இந்திரா காந்தியாக உருமாறியிருக்கிறார் கங்கனா.
“கெட் அப்பும் குரலும்கூட அப்படியே இந்திரா காந்தியை நினைவூட்டுகின்றன” என்று பாசிட்டிவ் விமர்சனங்கள், இன்று வெளியான ‘எமர்ஜென்சி’ டீசருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் கிடைத்திருக்கின்றன. அதேநேரம், தீவிர பா.ஜ.க ஆதரவாளரான கங்கனா ‘எமர்ஜென்சி’ படத்தில் இந்திரா காந்தியை எப்படிப் பிரதிபலிக்கப்போகிறார் என்ற சந்தேகங்களும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் பேசினோம். “கங்கனா ஒரு நடிகை. அரசியல் தலைவர்களின் படத்தில் நடிப்பதில் தவறில்லையே?” என்ற ஆதரவுக்குரலுடன் பேசத்தொடங்கினார் திருநாவுக்கரசர் எம்.பி.
“எமர்ஜென்சி திரைப்படம் இந்திரா காந்தி அம்மாவை கேலி செய்து வருகிறதா? அல்லது உலக அரங்கில் ஒரு பெண்ணாக, அவர் செய்த சாதனைகள், நல்ல விஷயங்கள் குறித்து வருகிறதா என்பது தெரியவில்லை. எதை முன்னிலைப்படுத்தி வருகிறது என்பதுதான் இங்கு பிரச்னை. இப்போ டீசர்தானே வெளியாகியிருக்கிறது. படம் வெளியான பிறகே எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
இந்தக் கட்சியைச் சேர்ந்தவர் நடிக்கக்கூடாது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான் நடிக்கவேண்டும் என்றில்லை. எந்த நடிகர் வேண்டுமென்றாலும் தலைவர்களின் படத்தில் நடிக்கலாம். அதேசமயம், இந்திரா காந்தி அம்மாவை அந்த கெட்டப்பின் மூலமாகவும் படத்தின் மூலமாகவும் உண்மைக்குப் புறம்பாகக் காட்டியிருந்தாலோ தரம்தாழ்ந்து விமர்சனம் செய்திருந்தாலோ கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்போம். சென்சார் போர்டினர் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அனுமதிப்பார்கள்” என்கிறார்.
ஆக்ரோஷமான் குரலிலேயே தனது எதிர்ப்பைப் பதிவு செய்து பேசும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, “எமர்ஜென்சி டீசரில் கங்கனாவைப் பார்த்தேன். இந்திரா காந்தியைப் போன்ற வீரம் தெறிக்கும் முகமாக அது தெரியவில்லை.
எதோ ஒப்பனைக்காரர்கள் மூக்கை மட்டும் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். இது வேடமிட்ட மங்கை என்பது நன்றாகத் தெரிகிறது. கங்கனா ரணாவத் பா.ஜ.கவுக்கு ஆதரவானவர். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகொண்டவர்.
அவர், எங்கள் தலைவி இந்திரா காந்தி வேடமிட்டு நடிப்பதைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஒரு தவறான பிரசாரம் செய்வதற்காகவே இப்படித் தலைப்பு வைத்துப் படம் எடுக்கிறார்கள். அன்னை இந்திரா காந்திதான் இந்தியாவை பலப்படுத்திய தலைவர். வங்காளதேசம் என்ற புதிய நிலப்பரப்பை உருவாக்கினார். பஞ்சாபில் காலீஸ்தான் பிரச்னையை அடியோடு ஒழித்தார். வீரப்பெண்மணியான அவரைத்தவிர இந்த இரண்டு காரியங்களையும் வேறு யாராலும் செய்துவிட முடியாது. அவரைக் கொச்சைப்படுத்துவதற்கும் கலங்கப்படுத்துவதற்கும் கங்கனா ரணாவத் போன்றவர்களை பா.ஜ.க பயன்படுத்துகிறது. இது இந்திரா காந்திக்குச் செய்யும் தீய செயல் அல்ல. இந்தியாவுக்கே செய்யும் தீய செயல்” என்கிறார்.