நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவைச் செயலகம், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இனி இந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில், `ஊழல், கோழை, சர்வாதிகாரி, திறமையற்றவர் உட்பட பல வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒருவேளை இந்த வார்த்தைகள் இனி பயன்படுத்தப்பட்டால், அவை அவைக்குறிப்பிலிருந்து சபைத் தலைவரால் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. பின்னர் இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். இதில் எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. இது 1959 முதல் தொடரும் ஒரு வழக்கமான நடைமுறைதான்” என நேற்று விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், “எம்.பி-க்கள் இனி, எந்தவொரு ஆர்ப்பாட்டம், தர்ணா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் அல்லது எந்தவொரு மத விழாவை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்ற வளாகத்தைப் பயன்படுத்த முடியாது” எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த சுற்றறிக்கையின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, `விஸ்வகுருவின் புதிய அறிவுரை!’ என விமர்சித்திருக்கிறார்.